India

“சொட்டு மருந்து என கூறி மூதாட்டியின் கண்ணில் Harpic ஊற்றிய கொடூர பெண்” : பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன?

ஹைதராபாத் அடுத்த நச்சாராம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமாவதி. மூதாட்டியான இவர் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். இதனால் லண்டனில் இருக்கும் மூதாட்டியின் மகன் தாயை கவனித்துக்கொள்வதற்காக பார்கவி என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டி கண்ணில் லேசாக வலி ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டில் இருந்த சொட்டு மருந்தை எடுத்து கண்ணில் விடும்படி பார்கவியிடம் கூறியுள்ளார். அப்போது அவரும் சொட்டு மருந்தை எடுத்து மூதாட்டியின் கண்ணில் விட்டுள்ளார்.

பின்னர் அவருக்கு நான்கு நாட்களாகக் கண்ணில் கடுமையாக வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து தனது மகனிடம் தொலைப்பேசியில் தெரிவித்துள்ளார். மேலும் கண் பார்வை முழுமையாகப் பாதிக்கப்படம் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து லண்டனிலிருந்து வந்த அவரது மகன் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதித்தபோது மூதாட்டியின் கண்ணில் ஏதோ ஒரு ரசாயனம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதனால் வீட்டில் வேலைபார்த்து வந்த பார்கவியிடம் அவரது மகன் சந்தேகம் அடைந்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.

பார்கவி வீட்டிலிருந்த நகை, பணங்களை கொள்ளை அடிக்கவே மூதாட்டியின் கண்ணில் ஹார்பிக் மற்றும் ஜண்டு பாம் தைலம் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து சொட்டுமருந்து என கூறி விட்டுள்ளார். பின்னர் வீட்டில் இருந்து ரூ.40 ஆயிரம் பணம் மற்றும் தங்க வலையல், தங்க செயின் உள்ளிட்டவற்றை திருடிவைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: “ஆபாச படம் அனுப்பி டாக்டரை மிரட்டிய இளம்பெண்கள்” : பொறி வைத்து பிடித்த போலிஸ்.. நடந்தது என்ன?