India

“வானத்துல ஏதோ வெளிச்சம்.. வேற்று கிரக விண்கலமா?” : பதறிப்போய் கேள்வி கேட்டவருக்கு இஸ்ரோ சொன்ன பதில்!

வானில் தெரிந்த வெளிச்சம், வேற்று கிரகவாசிகளின் விண்கலமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்ததால் இஸ்ரோவுக்கு மின்னஞ்சல் அனுப்பியவருக்கு இஸ்ரோ பதில் அளித்துள்ளது.

கிருஷ்ணகிரி பகுதியில் இன்று அதிகாலை வானில் தென்பட்ட வெளிச்சத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போன் கேமராவில் படம்படித்துள்ளார்.

அது வேற்று கிரகவாசிகளின் விண்கலமாக இருக்குமோ என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டதால், இதுதொடர்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு (ISRO) புகைப்படத்துடன் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பிய மின்னஞ்சலில், ”இன்று காலை வானில் இரண்டு சம்பவங்கள் நடந்தது. ஒன்று விண்கலம் அல்லது விமானம் லேசர் ஒளிக்கற்றையுடன் சென்றது. மற்றொன்று கிழக்கு பகுதியில் வானில் ஒளிரும் காட்சி. இவை இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தவை. இது என்ன?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவருக்கு இஸ்ரோ அளித்த பதிலில், “உங்க கேமரா நல்லா படம் பிடிச்சிருக்கு. அது வேறு ஒன்றும் இல்லை. இன்று காலை PSLV-C52 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. உங்களுக்கு மேற்கொண்டு தகவல் தேவையெனில் இஸ்ரோ இணையதளத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி - 52 ராக்கெட் இன்று காலை 5.59-க்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஏவுகணை மூலம் 3 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ளது.

இஸ்ரோ அனுப்பிய ஏவுகணை குறித்து அதிர்ச்சியோடு கேள்வி எழுப்பியவருக்கு இஸ்ரோ அனுப்பிய பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.