India

கொள்ளை கும்பலை பிடிப்பதற்காக காதலர்களாக மாறிய போலிஸார்.. நடந்தது என்ன?

மும்பையைச் சேர்ந்தவர் நிதிஷா. இவரது இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்ததை அடுத்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தனது 60வது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கோயிலில் கொண்டாடியுள்ளார்.

பின்னர், வீட்டிற்குத் திரும்பியபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது தங்க நகைகள், டி.வி உள்ளிட்ட வீட்டில் இருந்த அனைத்துப் பொருள்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நிதிஷா குடியிருக்கும் தெருவில் அடிக்கடி ஒரு டாக்ஸி வந்து சென்றுகொண்டிருந்தது.

இதன் மீது போலிஸாருக்கு சந்தேகம் எழுந்ததை அடுத்து உதவி ஆய்வாளர் மீனாக்ஷி, கான்ஸ்டபிள் கைலாஷ் ஆயோகர் காதலர்கள் போல் நடித்து அந்த டாக்ஸியை கண்காணித்து வந்தனர். மேலும் அப்பகுதியில் போலிஸார் பழங்கள் மற்றும் காய்கறி வியாபாரிகளாக நடத்து அந்தப்பகுதியின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர்.

இதையடுத்து சந்தேகத்திற்கு இடம்கொண்ட அந்த டாக்ஸி ஓட்டுநர் நௌஷாத்தை கண்காணித்ததில் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவர் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நௌஷாத் கான், சதாம் கான், அப்துல் பதான், ரோனி, குட்டு ஆகிய ஐந்து பேரை போலிஸார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடமிருந்த ரூ.16 லட்சம் மதிப்புள்ள நகைகளை போலிஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் மீது ஏற்கனவே 29 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: கணவனை மிரட்ட விளையாட்டாக விஷம் குடித்த கர்ப்பிணிக்கு ஏற்பட்ட கதி... சோகத்தில் குடும்பம் : நடந்தது என்ன?