India

கழுத்தில் ‘QR Code’.. மொபைல் வாலட்.. டிஜிட்டல் முறையில் பிச்சையெடுக்கும் மனிதர்!

பீகாரில் உள்ள பெட்டியா ரயில் நிலையத்தில் பிச்சைக்காரர் ஒருவர், டிஜிட்டல் முறையில் பிச்சை எடுத்து வருவது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

பீகார் மாநிலம் பெட்டியா ரயில் நிலையத்தில் ராஜூ பட்டேல் (40) என்பவர், டிஜிட்டல் முறையில் பிச்சை எடுத்து வருகிறார். தனக்கு பிச்சை போடுபவர்களின் வசதிக்காக, டிஜிட்டல் பேமெண்ட் முறையை பின்பற்றி வருகிறார்.

அதற்காக அவர் தனது கழுத்தில் ‘QR Code’ அட்டையையும் தொங்கவிட்டுள்ளார். மேலும் டேப் மூலம் மொபைல் வாலட்டையும் நிர்வகித்து வருகிறார்.

இதுகுறித்து ராஜூ பட்டேல் கூறுகையில், ‘நான் லாலு பிரசாத் யாதவின் தீவிர ஆதரவாளன். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மீது எனக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட்டதால், பிச்சை எடுப்பதையும் டிஜிட்டல் முறையில் பின்பற்ற விரும்பினேன்.

அண்மைக்காலமாக பலர் எனக்கு யாசகம் கொடுக்க மறுத்து வந்தனர். தங்களிடம் பணம் இல்லை என்று சொல்லிவந்தனர். சுற்றுலா பயணிகள் டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் கொடுக்கிறோம் என்றனர். அதனால் நானும் டிஜிட்டல் முறைக்கு மாறினேன்.

வங்கியில் கணக்கு தொடங்குவதற்காக பான் கார்டு வாங்கியுள்ளேன். பாரத் ஸ்டேட் வங்கி கணக்கு மூலம்தான் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுத்து வருகிறேன். எனக்கு தேவையான அளவிற்கு பிச்சை எடுப்பேன். சிறு வயதிலிருந்து இதே ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: காவித்துண்டு கும்பலுக்கு ஒத்த ஆளாக பதிலடி கொடுத்த இஸ்லாமிய பெண்: வைரல் வீடியோவின் பின்னணி என்ன?