India

முதல்வரின் சமூகநீதி கூட்டமைப்பில் இணைய ஆர்வம் காட்டும் இந்திய தலைவர்கள் : வரிசை கட்டும் ஆதரவு பதில்கள்!

தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு தொடங்கப்படும் என வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை வெளியிட்டார்.

இதையடுத்து சமூகநீதி காக்க கைகோப்போம் என அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 37 அரசியல் தலைவர்களுக்குக் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஏற்று அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது. மேலும் சமூகநீதி கூட்டமைப்பிற்குக் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக வீரப்ப மொய்லியை சோனியாக காந்தி நியமித்துள்ளார்.

அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரும் அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பிற்கு தங்களின் ஆதரவையும், ஒத்துழைப்பினை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முஃப்தியும் சமூக நீதி கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், நீங்கள் தொடங்கியிருக்கும் சமூக நீதி கூட்டமைப்பிற்கு மக்கள் ஜனநாயகக் கட்சி முழு ஒத்துழைப்பினை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அரசியல் கட்சித் தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Also Read: வலுப்பெறும் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு.. முதல்வரின் கடிதத்தை ஏற்று கூட்டமைப்பில் இணைந்த காங்கிரஸ்!