India

பெரும் ஹிட் ஆன ‘Kacha Badam' பாடகர் பூபன் கொடுத்த புகார்... என்ன நடந்தது?

சமீபமாக ஒரு பாட்டு வைரலாகி பெரும் ஹிட் அடித்திருக்கிறது. கச்சா பதம் (Kacha Badam) எனவொரு பாடல்.

யூ ட்யூப் தளத்துக்கு சென்றால் பல இளைஞர்களும் யுவதிகளும் இந்தப் பாட்டுக்கு ஆடும் காணொளிகள் அதிகமாக காணக் கிடைக்கின்றன. பாடலின் மெட்டும் குரலும் ஒருவகை உள்ளார்ந்த ஈர்ப்பை நம் மக்களுக்கு கிளர்ந்தெழ வைத்திருக்கிறது. பெரும் ஹிட் அடித்த இந்தப் பாடல் உருவான கதையே ஒரு சுவாரஸ்யம்தான்.

கச்சா படம் பாடலை பாடியவரின் பெயர் பூபான் பத்யகர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். சுவாரஸ்யம் என்னவென்றால் இவர் ஒரு கடலை வியாபாரி!

ஆம். சைக்கிளில் வேர்க்கடலையை வைத்து தெருத் தெருவாக சென்று கூவி விற்பவர்தான் பூபான் பத்யகர்.

மேற்கு வங்கத்தின் குரால்ஜுரி என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் பூபன் பத்யகர். இவர் செய்யும் கடலை வியாபாரத்தில் ஒரு வித்தியாசம் உண்டு. கையில் காசில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் வீட்டில் இருக்கும் பயன்படாத அல்லது உடைந்து போன பொருள் கொடுத்தாலும் அதை எடுத்துக் கொண்டு அதற்கு இணையான அளவுக்கு வேர்க்கடலை கொடுப்பார். நாளொன்றுக்கு 3லிருந்து 4 கிலோ வரை வேர்க்கடலை விற்பார். 200லிருந்து 250 ரூபாய் வரை ஒரு நாளில் கிடைக்கும். அந்த வருமானத்தை ஈட்ட அவர் ஊர் ஊராக சைக்களில் செல்வார்.

மிகவும் வறிய நிலையில் இருப்பவர். அவரது வீடே வீடு என்கிற தோற்றத்தில் இருக்கவில்லை. கூரையாக சில ஓலைகளும் ஆங்காங்க சில செங்கற்களும் கூரையைத் தாங்கும் ஓலைகளும்தான் வீடு. இரண்டு மகன்களும் ஒரு மகளும் அவருக்கு உண்டு.

வேர்க்கடலை விற்கையில் மக்களை ஈர்ப்பதற்காக பூபன் பத்யகர் பாடும் பாடல்தால் ‘கச்சா பதம்’ பாடல்.

நல்ல தரமான கடலை இருக்கு.

தங்க வளையல், உடைஞ்ச மொபைல்

எல்லாத்துக்கும் கடலை இருக்கு

உடைஞ்ச மொபைல் ஃபோன் அஞ்சு ரூபா அகும்

பூங்கொத்தோ கைகாப்போ வளையலோ இருந்தாலும் கொடுங்க

அதே அளவுக்கான வேர்க்கடலை உங்களுக்குக் கிடைக்கும்

அண்ணே... வேர்க்கடலை

இல்லை வறுத்தக் கடலை

பச்சைக் கடலை மட்டும்தான் கிடைக்கும்

என்பதாக போகும் பாடல் அது. பூபன் பத்யகர் விற்கும் வேர்க்கடலையைக் காட்டிலும் பாட்டால் ஈர்க்கப்படும் ஊர்க்காரர்கள் பலர். அவர்களில் ஒருவர் அவரது பாடலை ஒளிப்பதிவு செய்து யூ ட்யூபில் பதிவேற்றினார். இரண்டு மாதங்களில் அந்தக் காணொளியை 2 கோடிக்கு மேற்பட்டோர் பார்த்துவிட்டனர். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக தளங்களுக்கும் பாடல் பரவியது. நச்மூ ரீச்சட் என்கிற ஒரு இசைஞர் அந்தப் பாடலை, பூபன் பத்யகரின் குரலோடும் தன் இசையோடும் ஒரு பாடலாக்கி வெளியிட்டார். அதுவும் ஹிட்டடித்தது.

தன்னுடைய குரலையும் பாடலையும் வைத்துக் கொண்டு பாடல் அமைத்து அதில் பணம் ஈட்டப்படுவதைக் கேள்விப்பட்டு, காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார் பூபன் பத்யகர். ‘எல்லாரும் வந்து வீடியோ எடுக்கிறார்கள். ஆனால் பணம் எதுவும் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்’ என்கிறார் பூபன்.

‘மண்ணிலிருந்து வரும் கலையில் கலைஞனை புறக்கணித்துவிட்டு கல்லா கட்டவே வணிகம் பார்க்கும்’ என்கிற சமூகப் போக்குக்கு பூபன் பத்யகரும் ஓர் உதாரணம் ஆகியிருக்கிறார். வணிகம் மட்டுமின்றி, அரசியலும் அவரது வீட்டுக்கு வந்திருக்கிறது. பாஜக எம்.எல்.ஏ வந்து தன்னால் ஆன எல்லா உதவிகளையும் செய்வதாக வாக்களித்திருக்கிறார். வீட்டைச் சுற்றி எப்போதும் கூட்டமாக இருக்கிறது என வருத்தம் கொள்கிறார் பூபன்.

தற்போது யாரும் தன்னைப் பார்த்துவிடக் கூடாது என ஹெல்மெட் அணிந்து வேர்க்கடலை விற்கச் சென்று கொண்டிருப்பதாக சொல்கிறார் பூபன் பத்யகர்.

Also Read: இளசுகளின் கீதமாக உள்ள ‘கச்சா பாதாம்’ பாடலை பாடியது இவரா? வைரல் வீடியோவின் பின்னணி!