India

“முடிந்தது ஏர் இந்தியா.. அடுத்த டார்கெட் LIC” : படியளந்த பொதுத்துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது நியாயமா?

நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை பெரு முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் வகையில், அரசு நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது, ஒட்டுமொத்தமாக தனியார் வசம் ஒப்படைப்பது என பல்வேறு வகையில் தனியார்மயமாக்கலை ஊக்குவித்து வருகிறது மோடி அரசு.

அதன் தொடர்ச்சியாக இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையிலும் அவ்வாறே பிரதிபலித்தது. குறிப்பாக ஏர் இந்தியாவை தனியாரிடம் விற்பனை செய்ததை வெற்றியாக நாடாளுமன்றத்தில் அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்ததாக எல்.ஐ.சியின் பங்குகளை விற்பதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எல்.ஐ.சி ஊழியர்கள் மட்டுமல்லாமல் எல்.ஐ.சி முகவர்கள், எல்.ஐ.சி-யில் காப்பீடு எடுத்துள்ள நுகர்வோர் என பலர் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எல்.ஐ.சி கடந்த 2020 நிதியாண்டில் அரசுக்கு கடன் தந்த தொகை ரூ.2,611 கோடி. கடந்த 1956ஆம் ஆண்டில் வெறும் 5 கோடி அரசு முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்.ஐ.சி.க்கு, அதற்கு பின்னர் கூடுதல் முதலீடே தேவைப்படவில்லை. பங்குச் சந்தைக்கு இழுத்து வருவதற்காகவே சட்ட நுணுக்கங்களை காரணம் காட்டி ரூ.100 கோடியாக மூலதனத்தை உயர்த்தினார்கள்.

இந்த தொகையும் அரசு ஆண்டுதோறும் எல்.ஐ.சியிடமிருந்து பெறுகிற மிகச்சிறிய பகுதியேயாகும். வெல்லப் பிள்ளையாரை கிள்ளி அவருக்கே நைவேத்தியம் செய்வது போலத்தான். இப்படி தற்சார்பு கொண்ட நிறுவனத்தை தனியார் மயமாக்க முனைவதற்கு என்ன நியாயம் இருக்கிறது?

Also Read: இதுதான் மோடி அரசின் பட்ஜெட் சாதனையா ? : ஒரே நாளில் ரூபாய் 3.6 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!