India

“ஏழைகளை இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களே.. அதுக்கே நன்றி சொல்லணும்”: பட்ஜெட் குறித்து விளாசிய ப.சிதம்பரம்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள ஒன்றிய பட்ஜெட் முதலாளித்துவ பட்ஜெட் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., “ஒன்றிய பட்ஜெட்டில் வரிச் சலுகை குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஜி.எஸ்.டி வருமான வரி சலுகைகள் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் முன்வரவில்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்தவோ விலைவாசி உயர்வை குறைக்கவோ நடவடிக்கை இல்லை.

விவசாயம் மற்றும் அதனை சார்ந்த அனைத்து துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்வதற்கான எந்த திட்டமும் வகுக்கப்படவில்லை.

ஏழைகள் என்ற வார்த்தை பட்ஜெட்டில் 2 முறை இடம்பெற்றிருந்தது. இதன்மூலம், ஏழைகளை மறக்காமல் இருந்ததற்கு நன்றி. நாட்டில் ஏழை மக்களும் இருக்கிறார்கள் என்பதை தற்போதுதான் நிதியமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார்.

சிறு குறு நடுத்தர தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட அனைத்து மானியங்களும் தற்போது குறைக்கப்பட்டுள்ளன.

ஒரு நிதியமைச்சரால் வாசிக்கப்பட்ட முதலாளித்துவ பட்ஜெட் உரை இதுதான். மூலதன செலவு, வட்டியில்லா கடன், சுருக்கமான உரையை தவிர வேறெதுவும் அதில் குறிப்பிடும்படி இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “கதறி அழும் ஏழைகளின் கண்களில் சுண்ணாம்பு வைத்து தேய்த்துள்ளது மோடி அரசு” : பட்ஜெட் மீது கடும் அதிருப்தி!