India

“ஒன்றிய அரசின் விருது எனக்கு வேண்டாம்” : பத்மபூஷன் விருதை ஏற்க மறுத்த புத்ததேவ் பட்டாச்சார்யா!

நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 2022- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டது.

சமூக சேவை, பொது நிர்வாகம் , இலக்கியம் , கல்வி , தொழில்நுட்பம் , அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த நூற்று இருபத்தி எட்டு பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது ஒன்றிய அரசு.

அந்தவகையில் மறைந்த முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 4 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேற்கு வங்க மாநில முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் பெயர் பத்ம பூஷன் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தனக்கு பத்ம பூஷன் விருது வேண்டாம் என அவர் நிராகரித்துள்ளார். இதுகுறித்து புத்ததேவ் பட்டாச்சார்யா வெளியிட்ட அறிக்கையில், பத்ம பூஷன் விருது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதைப் பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை. எனக்கு பத்ம பூஷன் வழங்கப்பட்டால், அதை ஏற்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்ததேவ் பட்டாச்சார்யா அதை ஏற்க மறுத்துவிட்டார். அரசின் இத்தகைய விருதுகளை நிராகரிப்பது கட்சியின் நிலையான கொள்கையாகும். எங்களின் பணி விருதுகளுக்காக அல்ல, மக்களுக்கானது. முன்னதாக, தனக்கு அறிவிக்கப்பபட்ட விருதை இ.எம்.எஸ் நம்பூதிரி பாட் மறுத்துவிட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அதை வேண்டாம் என்று புத்ததேவ் பட்டாச்சார்யா மறுத்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: வேளாண் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: அர்ஜுனா, பத்ம விருதுகளை திருப்பியளிக்க பஞ்சாப் வீரர்கள் முடிவு!