India

சிக்கலை தீர்க்க வந்த ஜோதிடருக்கு பிரச்னை கொடுத்து ரூ.49 லட்சம் பறித்த Honey Trap தம்பதி - நடந்தது என்ன?

தங்கள் பிரச்னைகளை தீர்க்க பூஜை செய்வதற்காக ஜோதிடர் ஒருவரை வரவழைத்து அவருக்கே பிரச்னை கொடுத்து ரூ. 49 லட்சம் பணம் பறித்த தம்பதிகளை மங்களூரு போலிஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் சிக்மகளூருவைச் சேர்ந்த ஜோதிடரை நாடிய அந்த ஹனிட்ராப் மோசடி தம்பதிகள் தங்கள் வீட்டில் பூஜை செய்வதாக கூறி அர்ச்சகரை வரவழைத்து அவரிடம் உல்லாசமாக இருந்து பின் பணம் பறிக்கும் தம்பதியை மங்களூர் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் பிரசாத் தலைமையிலான போலீசார் நேற்று பிடித்தனர்

இதுகுறித்து மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா சனிவாரச்சந்தை பகுதியைச் சேர்ந்தவர் பவ்யா (35) இவரது முதல் கணவரின் பெயர் மஞ்சுநாத். இரண்டாவது கணவரின் பெயர் ராஜு என்கின்ற குமார். பவ்யா இரண்டாவது கணவருடன் மங்களூரில் உள்ள பதவினங்கடி என்ற பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி வசித்து வந்தார்.

இந்த நிலையில் இவர்களது வீட்டில் நிம்மதி இல்லை என்று கூறி சிக்மகளூருவைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவரை நாடி தங்கள் வீட்டுக்கு பூஜைகள் செய்ய அழைத்து வந்தனர். பின்னர் அவருடன் நெருக்கமாக இருந்து உறவு கொண்டு பவ்யா வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் அடிக்கடி அந்த ஜோதிடரை தொடர்புகொண்டு, வீடியோவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம் எனக் கூறி மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். ரூ.49 லட்சம் வரை பணம் பறித்த நிலையில் ஒருகட்டத்தில் பணம் கொடுக்க முடியாத காரணத்தால் ஜோதிடர் மங்களூரு கிராமப்புற போலிஸில் புகார் கொடுத்தார்.

இது சம்பந்தமாக வழக்கு பதிவுசெய்த மங்களூரு புறநகர் போலிஸார் மற்றும் மாநகர குற்றப்பிரிவு போலிஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் பிரசாத் தலைமையிலான போலிஸ் படை நேற்று பவ்யா மற்றும் உடந்தையாக இருந்த ராஜு என்கின்ற குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் ஏற்கனவே பல்வேறு இடங்களில் இதுபோல் ‘ஹனி டிராப்’ முறையில் ஆட்களை வரவழைத்து அவர்களுடன் இருந்து வீடியோ எடுத்துவிட்டு பின்னர் அந்த வீடியோவை வெளியிடுவோம் என்று கூறி பணம் பறித்த விவரமும் தெரியவந்துள்ளது.

பிடிபட்ட இந்த தம்பதிகளிடம் இருந்து ஒரு புதிய மோட்டார் சைக்கிள் மற்றும் 4 செல்போன்கள், 37 ஆயிரம் ரொக்கப்பணம் 30 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு தங்க மோதிரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Also Read: “மேட்ரிமோனி மூலம் 35 பெண்களிடம் மோசடி செய்த ஆசாமி” : மாறுவேடத்தில் சென்று மடக்கிய போலிஸ் - நடந்தது என்ன?