India
முதலீடு செயலி மூலம் ரூ.84 கோடி சுருட்டல்: அமலாக்கத்துறை பிடியில் முக்கிய குற்றவாளி; விசாரணையில் பகீர்!
பவர் பேங்க் எனும் முதலீடு செயலி மூலம், பணத்தை முதலீடு செய்தால் குறைந்த காலத்தில் பணத்தை இரட்டிப்பாக்கலாம் என்ற இணைய விளம்பங்களை நம்பி நூற்றுக் கணக்கானோர் இந்த செயலியில் தங்கள் பணத்தை முதலீடு செய்து மோசடி கும்பலின் வலையில் சிக்கி பாதிக்கப்பட்டதாக புகார் பதிவாகியுள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதிப்பிற்குள்ளான நூற்றுக்கணக்கானோர் பணத்தை இழந்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் அளித்து வந்த நிலையில், தமிழகத்திலும் இந்த செயலியால் பாதிக்கப்பட்ட பலரின் புகார்கள் குவிந்தன. இந்த மோசடியில் வட மாநில மோசடி கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் இவ்வழக்கு சிபிசிஐடி சைபர் க்ரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டு காவல் ஆய்வாளர் வசந்தி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பவர் பேங்க் செயலி உட்பட 110 போலி நிறுவனங்கள் பெயரில் போலி செயலிகளை உருவாக்கி அதன் மூலம் சுமார் 150 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து சீன நிறுவனங்களுக்கு அனுப்பியதாக அவிக் கெடியா, ரொனாக் பன்சால் உட்பட 11 பேரை டெல்லி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குறிப்பாக சி.ஏ பட்டதாரிகளான அவிக் கெடியா மற்றும் ரொனாட் பன்சால் ஆகிய இருவரும் தனது கூட்டாளிகளுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்த டெல்லி சைபர் கிரைம் போலீசார் அவர்களை கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர்.
தமிழகத்திலும் நூற்றுக்கணக்கான பேரிடம் கைவரிசையை காட்டியது இதே கும்பல்தான் என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு தமிழக சிபிசிஐடி போலீசார் பவர் பேங்க் மோசடி கும்பலின் முக்கிய குற்றவாளியான சி.ஏ பட்டதாரி அவிக் கெடியாவை விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் ஆணை பெற்றனர்.
அவிக் கெடியா
பின்னர் மோசடி கும்பலின் முக்கிய குற்றவாளியான அவிக் கெடியாவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி கைது செய்தனர். அவிக் கெடியாவிடம் 2 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கேராளவை சேர்ந்த அனாஸ் அகமது என்ற மற்றொரு நபரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கேரளாவை சேர்ந்த அனாஸ் அகமது H&S ventures மற்றும் clifford ventures ஆகிய இரு நிறுவனங்களை வைத்து பவர் பேங்க் உள்ளிட்ட மோசடி செயலிகள் மூலம் பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அனாஸ் அகமது சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் பவர் பேங்க் உள்ளிட்ட மோசடி செயலிகள் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது. அதனடிப்படையில் அனாஸ் அகமது மீது அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஏற்கெனவே சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அனாஸ் அகமதை , அமலாக்கத் துறையினர் கைது செய்து பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியுள்ளனர்.
அனாஸ் அகமது
அனாஸ் அகமதை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் அனுமதி பெற்றுள்ளனர். முன்னதாக அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில், H&S ventures மற்றும் clifford ventures என்ற நிறுவனங்கள் மூலம் மோசடி செயலிகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து சுமார் 84 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்திருப்பதை அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் அனாஸ் அகமதுக்கு சீன நாட்டினர் உடன் தொடர்பு இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கிரிப்டோ கரன்சி ஆக வெளிநாடுகளுக்கு கொள்ளையடித்த பணத்தை மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அனாஸ் அகமது மனைவி Hu Xiolin சீன நாட்டை சேர்ந்த பெண் எனவும் தெரிய வந்துள்ளது. ஆனால் அகம்மது கேரளாவை அடிப்படையாக வைத்து பல்வேறு தொழில்களை செய்து வந்த தொழில் அதிபராக அனாஸ் அகமது இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது
ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெங்களூரு போலீசார் இதேபோன்று மோசடி செயலி மூலம் சுமார் 290 கோடி ரூபாய் அளவில் பொதுமக்கள் பணத்தை ஏமாற்றிய விவகாரத்தில் அனாஸ் அகமது ,2 சீன நாட்டினர் மறறும் 2 திபெத்திய நாட்டினர் என 11 பேரை கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அளவில் இந்த மோசடி செயலி மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததில் தமிழ்நாடு, கர்நாடகா ,டெல்லி தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சீன மற்றும் திபெத்திய நாட்டைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?