India

“கட்சிக்காக பணத்தை வாங்கிட்டு ஏமாத்தீட்டாங்க” - பாஜகவிலிருந்து விலகியவர் கண்ணீர் மல்க பேட்டி!

உத்தர பிரதேசத்தின் சட்டமன்றத்துக்கான தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதற்காக 403 தொகுதிகளுக்கு இந்த தேர்தலுக்காக பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் என பல அரசியல் கட்சிகளும் போட்டிப் போட்டு பணியாற்றி வருகின்றனர்.

ஆளும் பாஜக தரப்போ ஆட்சியை தக்க வைக்கும் கனவோடு களப்பணியாற்றுகிறது. ஆனால் உத்தர பிரதேசத்தில் நடக்கும் நிகழ்வுகள் ஏதும் பாஜகவுக்கு சாதகமாக இருப்பதாக தெரியவில்லை. ஏற்கெனவே யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் இருந்து 3 அமைச்சர்கள் மற்றும் 4 எம்.எல்.ஏக்கள் வெளியேறி சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளில் இணைந்துள்ளதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மதுராவைச் சேர்ந்த பாஜகவின் முக்கிய பிரமுகராகவும் அப்பகுதியின் பெரும் செல்வந்தராகவும் இருக்கக் கூடிய எஸ்.கே.சர்மா பாஜகவில் இருந்து விலகி கண்ணீர் மல்க பேட்டியளித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி 2009ம் ஆண்டு முதல் உத்தர பிரதேச தேர்தல் பாஜக சார்பில் போட்டியிட தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வந்திருக்கிறாராம் சர்மா. ஆனால் கட்சி மேலிடமோ அவரை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்து வந்திருக்கிறது. இப்படி இருக்கையில், நடைபெற இருக்கும் தேர்தலிலாவது தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எண்ணிக்கொண்டிருந்த நிலையில் மதுராவின் மந்த் தொகுதியில் சர்மாவுக்கு பதில் ராஜேஷ் சவுத்ரி என்ற இளைஞரை பாஜக வேட்பாளராக நிறுத்த இருக்கிறது.

இதனால் கடுமையான அதிருப்திக்கும் மன உளைச்சலுக்கும் ஆளான சர்மா, பாஜகவில் இருந்து விலகுவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்ததோடு பாஜக குறித்து பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்திருக்கிறார்.

அதில், “பாஜகவுக்காக இதுவரையில் கோடிக் கணக்கில் செலவிட்டிருக்கிறேன். எப்போது கேட்டாலும் மறுக்காமல் பணத்தை அள்ளி கொடுத்திருக்கிறேன். என் சொத்துக்களை இழந்திருக்கிறேன். ஆனால் இப்போது அவர்களாலேயே ஏமாற்றப்பட்டிருக்கிறேன். ராமர் பேரில் பெரும் மோசடிகளை பாஜக புரிந்து வருகிறது. அதன் நோக்கத்தையும் கொள்கையையும் பாஜக இழந்துவிட்டது. இனி கட்சியில் இருந்துக்கொண்டு மக்களுக்காக பணியாற்ற முடியாது” என கண்ணீர் சிந்தியபடி கொந்தளித்திருக்கிறார் சர்மா.

பாஜகவில் இருந்து சர்மா விலகுவதாக அறிவித்ததை அடுத்து அவரது வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த பாஜகவின் கொடியையும் அவரது ஆதரவாளர்கள் அகற்றியுள்ளனர்.

Also Read: வயிற்று வலியால் துடித்த கைதி; அதிர்ந்து போன மருத்துவர்கள் - திகாரில் பரபரப்பு; நடந்தது என்ன?