India

“இந்துக்கள் அல்லாதவர்கள் இங்கு வரக்கூடாது” : வாரணாசியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை!

உத்தர பிரதேச மாநிலம், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது வாரணாசி. ஆன்மிக தளமான இங்குப் புகழ் பெற்ற காசி விசுவநாதர் கோயில் தொடங்கி பல்வேறு பாரம்பரியமிக்க கோயில்கள் உள்ளன.

மேலும், பழமையான கட்டிடங்களுக்குப் புகழ்பெற்ற நகரமாகவும் வாரணாசி உள்ளது. இதனால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் முதல் பல்வேறு தரப்பினரும் வாரணாசியின் அழகைப் பார்ப்பதற்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், "இந்துக்கள் மட்டுமே வாரணாசிக்கு வரவேண்டும். மற்ற யாரும் வாரணாசியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது" என்ற வாசத்துடன் போஸ்டர் ஒன்று அந்த நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போஸ்டர்களை இந்து அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் ஒட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "இந்த போஸ்டர்கள் மூலம் வாரணாசி பிக்னிக் ஸ்பாட் அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்.

வாரணாசி கலாச்சாரத்தின் சின்னம் என்பதால், இந்துக்களைத் தவிர வேறு யாரும் இங்குள்ள கோவில்களுக்கு வரக்கூடாது. இது ஓர் எச்சரிக்கை. வேண்டுகோள் அல்ல" எனத் தெரிவித்துள்ளனர்.

வாரணாசியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது இந்துக்கள் அல்லாதோர் மீது காட்டும் வெறுப்பு அரசியல் என சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read: “கர்நாடகாவில் ஒரே நாளில் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும்” : ஆய்வு முடிவால் கடும் அதிர்ச்சி!