India

மகளிர் காவல் நிலையத்தில் மதுவிருந்துடன் குத்தாட்டம் : ஆண் போலிஸார் உட்பட 5 பெண் காவலர்கள் பணி இடைநீக்கம்!

கர்நாடக மாநிலம் மங்களூரு மாநகர போலிஸ் எல்லைக்குட்பட்ட பாண்டேஷ்வர் பகுதியில் உள்ள மகளிர் போலிஸ் நிலையத்தில் வைத்து உதவி போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலிஸ்காரர்கள் மது அருந்தி குத்தாட்டம் ஆடியதாக மாநகர போலிஸ் கமிஷனர் சசிகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி துணை போலிஸ் கமிஷனர்கள் ஹரிராம் சங்கர், ரஞ்சித் பாண்டாரு ஆகியோருக்கு சசிகுமார் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவர்கள் விசாரணை நடத்தி போலிஸ் கமிஷனர் சசிகுமாரிடம் நேற்று அறிக்கை தாக்கல் செய்தனர். 

அந்த அறிக்கையில், மகளிர் போலிஸ் நிலையத்தில் 2 உதவி போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், 3 போலிஸ்காரர்கள் மது அருந்தியதுடன், நடனமாடியதும் உறுதி செய்யப்பட்டது. அந்த அறிக்கையுடன் போலிஸ் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவும் சமர்பிக்கப்பட்டது.

இதையடுத்து மகளிர் போலிஸ் நிலைய உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், போலிஸ்காரர்கள் என 5 பேரை பணி இடைநீக்கம் செய்து போலிஸ் கமிஷனர் சசிகுமார் உத்தரவிட்டார்.  இதேபோல, போக்சோ வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த மற்றொரு மகளிர் போலிஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ரோசம்மாவும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Also Read: “ஏன் 20 நாட்களாக வெளியூரில் இருந்தீர்கள்?” : ராஜேந்திர பாலாஜிக்கு நீதிபதி சரமாரி கேள்வி - நடந்தது என்ன?