India

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் 66 பேருக்கு கொரோனா: அதிர்ச்சியடைந்த கோவா அரசு செய்தது என்ன?

மும்பையில் இருந்து 2 ஆயிரம் பயணிகளுடன் கோவா சென்ற சொகுசு கப்பலில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் அனைத்து பயணிகளுடனும் கப்பல் மும்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

மும்பையில் இருந்து 1,471 பயணிகள், 595 கப்பல் பணியாளர்கள் என 2 ஆயிரம் பயணிகளுடன் ‘கார்டெலியா குரூஸ்’ என்ற சொகுசு கப்பல் புறப்பட்டுச் சென்றுள்ளது. அந்தக் கப்பல் கோவாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, கப்பலில் உள்ள 1,471 பயணிகள், 595 ஊழியர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கப்பல் வாஸ்கோவில் உள்ள மோர்முகாவ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுகள் வெளியானதில் கப்பலில் இருந்த 66 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக கப்பலில் உள்ள 2,000 பேரும் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த சொகுசு கப்பலில் பயணித்த அனைத்து பயணிகளும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் என்பதால் அவர்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கோவா சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே தனது ட்விட்டர் பதிவில், “கார்டெலியா கப்பலில் இருந்து 2,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 66 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பயணிகளை கப்பலில் இருந்து இறங்க அனுமதிப்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள்” எனத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ள பயணிகளை கொரோனா மருத்துவமனையில் சேர்க்க கோவா அரசு தீர்மானித்தது. ஆனால் அந்தப் பயணிகள் மருத்துவமனையில் இருக்க மறுத்துவிட்டனர்.

நிலைமையைக் கருத்தில் கொண்டு, தெற்கு கோவா மாவட்ட நிர்வாகம் அனைத்து பயணிகளுடனும் கப்பலை மும்பைக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டது. அதன்படி சொகுசு கப்பல் பயணிகளுடன் மும்பைக்கு திரும்பிச் சென்றுகொண்டிருக்கிறது.

Also Read: “மாஸ்க் போடாம வெளில வரக்கூடாது” : சாலையில் இறங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய முதலமைச்சர்!