India

“உண்மைன்னா மோடி அரசுக்கு பயம்.. நாட்டுக்காக 32 குண்டுகளை வாங்கிய பெண் பெயர் எங்கே?” : விளாசிய ராகுல்!

உண்மையைக் கண்டு பா.ஜ.க அரசு பயப்படுவதால், போர் வெற்றி கொண்டாட்டம் தொடர்பான அழைப்பிதழில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயர் இடம்பெறவில்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போரிட்டது. டிசம்பர் 3-ஆம் தேதி தொடங்கிய இப்போரில் டிசம்பர் 16-ஆம் தேதி இந்தியா வெற்றிவாகை சூடியது. அன்று நிபந்தனையற்ற போர்நிறுத்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. அப்போது இந்திய பிரதமராக இந்திரா காந்தி இருந்தார்.

'விஜய் திவாஸ்' என்ற பெயரில் ஆண்டுதோறும் இதன் வெற்றிவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு டில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த விழாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மோடி அரசைச் சாடியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த காங். பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பல குடும்பங்களை போல், எனது குடும்பமும் நாட்டிற்காக தியாகம் செய்துள்ளது. இதுதான், உத்தரகாண்டிற்கும் எனக்கும் இடையேயுள்ள தொடர்பு.

வங்கதேச போர் தொடர்பாக டெல்லியில் அரசு சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயர் எங்கும் இடம்பெறவில்லை.

நாட்டிற்காக 32 குண்டுகளை வாங்கிக்கொண்ட பெண்ணின் பெயர் அழைப்பிதழில் இடம்பெறவில்லை. ஏனெனில், உண்மையைக் கண்டு இந்த அரசு பயப்படுகிறது.

1971 ம் ஆண்டு நடந்த போரில் 13 நாட்களில், இந்தியாவிடம் பாகிஸ்தான் தலைவணங்கியது. இந்தியா 13 நாட்களில் பாகிஸ்தான் தோற்கடித்ததற்கு காரணம் நாடு ஒற்றுமையாக இருந்ததே காரணம்” எனப் பேசியுள்ளார்.

Also Read: “₹1 கோடி மதிப்பிலான முந்திரி லாரியை கடத்திய வழக்கு..” : அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் மீது குண்டாஸ்!