India

உரத் தட்டுப்பாட்டை தவிர்க்க என்ன முயற்சி எடுத்துருக்கீங்க? - ஒன்றிய அரசுக்கு டி.ஆர்.பாலு MP சரமாரி கேள்வி

விவசாயத்தை பாதிக்கும், அத்தியாவசியமான உரத் தட்டுப்பாட்டை தவிர்க்க, ஒன்றிய அரசின் முயற்சிகள் ஏதேனும் எடுக்கப்பட்டுள்ளதா? என மக்களவையில், தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் ஒன்றிய அமைச்சரும், தி.மு.க. பொருளாளரும், திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, 03 டிசம்பர் 2021 அன்று, மக்களவையில், இந்திய விவசாயத்தை பெருமளவில் பாதிக்கும், அத்தியாவசியமான உரங்களின் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு, ஒன்றிய அரசினால் ஏதேனும் முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதா? என்றும், பல்வேறு மாநிலங்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ள உரங்களின் விவரம் என்னென்ன? என்றும், செயற்கை உரங்களிலிருந்து மாற்றாக இயற்கை உரங்களைத் தயாரிக்க ஏதேனும் திட்டங்கள் உள்ளதா? என்றும், ஒன்றிய இரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவிடம் விரிவான கேள்வியை எழுப்பினார்.

ஒன்றிய இராசாயன மற்றும் உரத் துறை அமைச்சர் அளித்த பதில் பின் வருமாறு:

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அத்தியாவசிய உரத்திற்கு எந்த விதமான தட்டுப்பாடுகளும் இல்லை என்றும், சில மாநிலங்களில், சில மாவட்டங்களில் மட்டும் டை அம்மோனியம் பாஸ்பேட் உரம் தேவைப்பட்டபோது உடனடியாக அந்தப் பகுதிகளுக்கு உரம் அனுப்பப்பட்டு நிலைமை சரி செய்யப்பட்டது என்றும், டை அம்மோனியம் பாஸ்பேட்டின் தேவை 34 இலட்சம் மெட்ரிக் டன்கள் என்ற அளவிலேயே உள்ளது என்றும், ஆனால் உற்பத்தி 36 இலட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், உரத் தட்டுப்பாடுகளைத் தவிர்க்க கணினி மூலம் ஒருங்கிணைந்த கண்காணிப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவற்றை தங்கு தடையின்றி எடுத்துச் செல்லத் தேவையான ரயில்வே பெட்டிகள் வழங்கப்பட்டன என்றும், தேவையான அளவு யூரியா இறக்குமதி செய்யப்பட்டது என்றும், ஒரு மூட்டை யூரியா 242 ரூபாய் என்ற விலைக்கு வழங்கப்பட்டது என்றும், இயற்கை உரங்களை ஊக்குவிக்க ஒன்றிய அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் விரிவான பதிலை அளித்துள்ளார்.

Also Read: "இந்தியாவின் பட்டினி நிலையை தடுக்க ஒன்றிய அரசின் நடவடிக்கை என்ன?": டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!