India

“உ.பியில் தலித்களுக்கு எதிராக வன்கொடுமை நடக்காத நாளே இல்லை” : பா.ஜ.க அரசு மீது மாயாவதி தாக்கு!

உ.பி.யில் ஒவ்வொரு நாளும் தலித்களுக்கு எதிராக தொடர்ந்து அட்டூழியங்கள் நடந்துகொண்டிருப்பதாக மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் இன்று அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அம்பேத்கர் நினைவுதினத்தையொட்டி லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி, “உத்தர பிரதேச மாநிலத்தில் நலிந்த பிரிவினருக்கு எதிராக வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை.

நலிந்த மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை வெளியிடாமல் ஊடகங்களை அடக்குவது எப்படி என்பது உத்தர பிரதேச மாநில பா.ஜ.க அரசுக்கு நன்றாகத் தெரியும்.

டாக்டர் அம்பேத்கர், தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் புறக்கணிக்கப்பட்டோரின் மேம்பாட்டிற்காகப் பாடுபட்டார். அவரால் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை அவர்களால் மக்கள் பெற முடியவில்லை. அதற்குக் காரணம் ஆளும் ஒன்றிய - மாநில அரசுகளின் அக்கறையின்மைதான்.

ஒன்றிய, மாநில அரசுகள் சாதிய மனப்பான்மையோடு இயங்குவதால்தான் நலிந்த மக்களுக்கு வழங்க அரசியல் சாசனத்தில் வகுக்கப்பட்ட சலுகைகளைப் பெற முடியாத நிலை உள்ளது." எனச் சாடியுள்ளார்.

Also Read: “இந்தியா என்பது ஒன்றியம்தான்.. நாம் சொல்வது அனைத்தும் அண்ணல் அம்பேத்கர் சொன்னதுதான்!” - முரசொலி தலையங்கம்