India

ரியல் எஸ்டேட் கும்பலிடம் நிலத்தைப் பறிகொடுத்த கேரள பழங்குடியின பாடகி: நடந்தது என்ன?

கேரள மாநிலம், அட்டப்பாடி பகுதியில் அதிகமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த நஞ்சியம்மாள் தான் 'ஐயப்பனும் கோசியும்' படத்தில் பாடல் ஒன்று பாடி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

நடிகர் பிரித்திவிராஜ் நடித்த ஐயப்பனும் கோசியும் படத்தில், 'களக்காத்த சந்தனமே" என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் கேரளா மட்டுமில்லாது தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ,இவரை பிரபலமடைய செய்தது.

இந்நிலையில் ரியல் எஸ்டேட் மோசடி கும்பல் ஒன்று நஞ்சியம்மால் நிலத்தை ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த கும்பல் இவரைப் போன்று பல பழங்குடியின மக்களின் நிலங்களையும் மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நஞ்சியம்மாள், "அகலி அரசு மருத்துவமனை அருகே 4.80 ஏக்கர் நிலம் இருந்தது. இதில் விவசாயம் செய்து வந்தேன். இந்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என கூறி அங்கிருந்து என்னை விரட்டிவிட்டனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் கூறியும் யாரும் உதவி செய்யவில்லை. ரியல் எஸ்டேட் மோசடி குறித்து நீதிமன்றத்தை அணுகியுள்ளேன். இதுபோன்று பலரும் ரியல் எஸ்டேட் மோசடியால் தங்களின் நிலங்களை இழந்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

பழங்குடியின பாடகியின் நிலம் அபகரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ’S EX’ என்ற நம்பர் ப்ளேட்டால் மன உளைச்சலுக்கு ஆளான டெல்லி பெண்: நடந்தது என்ன?