India

“தமிழ்நாடு No.1” : India Today ஆய்வில் தகவல் - சொன்னபடி மாநிலத்துக்கு பெருமை சேர்த்த முதலமைச்சர்!

‘இந்தியா டுடே’ இதழ் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது தமிழ்நாடு.

புகழ்பெற்ற ஆங்கில இதழான `இந்தியா டுடே’ நடத்திய ஆய்வின்படி இந்தியாவிலுள்ள பெரிய மாநிலங்களில்- செயலாற்றலில் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

`இந்தியா டுடே’ ஆங்கில இதழ் நடத்திய ஆய்வில் இந்தியாவிலுள்ள பெரிய மாநிலங்களில் செயலாற்றலில் பொருளாதாரம், அடிப்படைக் கட்டமைப்பு, விவசாயம், சுகாதாரம், கல்வி, சட்டம் - ஒழுங்கு, ஆட்சி நிர்வாகம், ஒட்டுமொத்த வளர்ச்சி, சுற்றுலா, சுற்றுச்சூழல், தூய்மை, தொழில் முனைவோரை ஊக்குவித்தல் உள்ளிட்ட துறைகளில் எந்தெந்த மாநிலங்கள் சிறப்பாகக் கையாள்கின்றன என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலமாக தெலங்கானா அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேளாண் வளர்ச்சியில் பஞ்சாப் மாநிலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்தில் முதலிடம் கேரளாவுக்கு கிடைத்துள்ளது. கல்வியில் முதலிடம் இமாச்சல் பிரதேசம் மாநிலத்திற்கு கிடைத்திருக்கிறது.

ஒருங்கிணைத்த வளர்ச்சியில் ஆந்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதிக தொழில் முனைவோர் உருவாகும் மாநிலமாக ஹரியானா முதலிடத்தில் உள்ளது.

இவற்றில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாகத் திகழ்வதாக ‘இந்தியா டுடே’ நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘நான் நம்பர் 1 என்று சொல்வதை விட, தமிழ்நாடு நம்பர் 1ஆக வேண்டும், அதுதான் என்னுடைய விருப்பம்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிவந்த நிலையில், இந்தியா டுடேயின் இந்த ஆய்வு முடிவு அவரது விருப்பத்தை பூர்த்தி செய்துள்ளது.

Also Read: “ஜனநாயகத்துக்கு யாரால் ஆபத்து..? கொஞ்சம் சிந்தித்துப் பேசுங்கள் பிரதமரே” : முரசொலி கடும் தாக்கு!