India

“உயரும் கடல்மட்டம்..கடும் வறட்சி நிலவும்- புவியியல் அமைப்பே மாறும் அபாயம்”: பருவநிலை ஆய்வாளர் எச்சரிக்கை!

இந்தியாவில் கடந்த ஆண்டுகளை விட அதிகமான இயற்கை பேரிடர்களை நாடு சந்தித்து வருகிறது. குறிப்பாகப் பல மாநிலங்கள் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தைச் சந்தித்து வருகின்றன.

இப்படி இந்தியாவைப் போன்ற உலக நாடுகளும் கனமழை, வெள்ளம், காட்டுத்தீ என இயற்கை பேரிடர்களைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றன. அண்மையில் கூட கிளாஸ்கோவில் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைப்பது தொடர்பான பருவநிலை மாநாடு நடைபெற்றது.

இதில் இந்திய பிரதமர் மோடி, ஜோ பைடன் உட்பட பல உலகத் தலைவர்கள் கலந்துகொண்டு பேசியுள்ளனர். இருப்பினும் இந்த மாநாடு தோல்வியடைந்துவிட்டது என்று கிரெட்டா தன்பர்க் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடல் மட்ட உயர்வால் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும் என பருவநிலை ஆய்வாளர் ஸ்வப்னா பனிக்கல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள அறிக்கை ஒன்றில், 1970ஆம் ஆண்டிலிருந்து 2000ஆம் ஆண்டு வரை சர்வதேச அளவில் கடல் மட்டம் 1.8 மி.மீ உயர்ந்துள்ளது. ஆனால் 1993ல் இருந்து 2017ஆம் ஆண்டு வரை இது 3.3. மி.மீ உயர்ந்துள்ளது. இது முந்தைய அளவீட்டை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்களை வைத்துப் பார்த்தால் 2050ஆம் ஆண்டில் 15 முதல் 20 செ.மீ அளவுக்குக் கடல் மட்டம் உயரும். இதனால் இந்தியக் கடலோர பகுதிகளில் புவியியல் அமைப்பே மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடல் மட்ட உயர்வினால் அதிக புயல்கள் ஏற்படக்கூடும்.

மேலும் மழைக்காலங்களில் அதி கனமழை இருப்பது போன்றே பருவமழை காலங்களில் மழை பொய்த்து கடும் வறட்சி நீடிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த கடல் மட்டம் உயர்வால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: இந்தியாவின் பருவநிலை மாற்றம் அபாய கட்டத்தில் உள்ளது - கிரேட்டா தன்பெர்க் எச்சரிக்கை!