India

“ஆடைக்கு மேல் தொட்டாலும் பாலியல் சீண்டல்தான்” : மும்பை ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்!

ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போக்சோ சட்டத்தின் கீழ் வராது என்ற மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு 12 வயது சிறுமியிடம் 39 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை கடந்த ஜன.,19 அன்று தீர்ப்பளித்தது.

மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கேந்திவாலா அளித்த தீர்ப்பில், “பாலியல் இச்சையுடன், உடலுறவு இல்லாமல், தோலும் தோலும் தொடர்பு கொள்ளாமல், சிறுமியின் மார்பகத்தை தொடுவது, பாலியல் அத்துமீறலாகாது' எனக் குறிப்பிடப்பட்டது. இது போக்சோ சட்டத்தின் கீழ் வராது எனத் தெரிவித்து அந்த நபரை விடுதலை செய்தார்.

இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்போதைய தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு இது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் எனத் தெரிவித்து, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்தனர்.

மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர், 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், உயரநீதிமன்ற கிளையின் உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதித்தனர்.

இந்நிலையில், அட்டர்ஜி ஜெனரல் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி உதய் உமேஷ் லலித், நீதிபதி எஸ் ரவீந்திர பட் மற்றும் நீதிபதி பேலா எம் திரிவேதி அடங்கிய அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது.

அப்போது, “போக்சோ பிரிவு 7 இன் கீழ் 'தொடுதல்' அல்லது 'உடல் தொடர்பு' ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது அபத்தமானது. தொடுதல் என்ற சொல் பாலியல் தொடர்பை குறிக்கும்; அது ஆடைக்கு மேல் இருந்தாலும் பாலியல் சீண்டல்தான்.

பாலியல் வன்கொடுமை குற்றத்தின் மூலப்பொருள் பாலியல் நோக்கமே தவிர உடல்- உடல் தொடர்புடையது அல்ல. ஒரு விதியை உருவாக்குவது அதற்கு வலு சேர்க்க வேண்டுமே தவிர அதனை அழித்துவிட கூடாது. சட்டத்தின் நோக்கம் குற்றவாளியை சட்டத்தின் கண்ணிகளில் இருந்து தப்பிக்க அனுமதிப்பதாக இருக்க முடியாது.” என்று தெரிவித்து மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Also Read: பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை : நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்!