India

“இறந்த பிறகும் விழிப்புணர்வு”: புனீத் ராஜ்குமார் செயலை தொடர்ந்து மருத்துவமனைக்கு படையெடுக்கும் ரசிகர்கள்!

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் மறைவைத் தொடர்ந்து, அவரது கண்கள் தானம் செய்யப்பட்டதால், கர்நாடகாவில் 15 நாட்களில் 6 ஆயிரம் பேர் கண் தானம் செய்துள்ளனர்.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த புனீத் ராஜ்குமார் கடந்த மாதம் திடீரென காலமானார். அவர் மரணமடைந்தாலும் தனது 2 கண்களையும் தானம் செய்திருந்தார். புனீத் ராஜ்குமாரின் கண்கள் மூலமாக 4 பேருக்கு பார்வை கிடைத்தது.

புனீத் ராஜ்குமார் கண்தானம் செய்ததால், அவரைப் பின்பற்றி அவரது ரசிகர்களும் கண்தானம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கர்நாடகா முழுவதும் புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் தாங்களாகவே முன்வந்து கண்களை தானம் செய்வதற்கு பதிவு செய்து வருகின்றனர்.

அதன்படி, புனீத் ராஜ்குமார் மரணமடைந்த பின்பு 15 நாட்களில் மட்டும் கர்நாடக மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது கண்களை தானம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

பெங்களூரு நாராயண நேத்ராலயா மருத்துவமனையில் மட்டும் 15 நாட்களில் 78 பேர் தங்களது கண்களை தானம் செய்துள்ளனர். அந்த மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு 100-க்கும் குறைவானவர்களே சராசரியாக கண் தானம் செய்துவந்துள்ளனர். ஆனால் புனீத்தின் மறைவுக்குப் பின்னர் 15 நாட்களில் 78 பேர் தாங்களாகவே வந்து கண்களை தானம் செய்துள்ளனர்.

புனீத் ராஜ்குமார் மறைந்தாலும் அவர் செய்த கண் தானத்தை, முன்னுதாரணமாகக் கொண்டு, பலரும் கண் தானம் செய்ய முன்வந்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: புனீத் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி.. குடும்ப நட்பை நினைவுகூர்ந்து உருக்கம்!