India

"ஜீன்ஸ் போட்டிருக்க.. உனக்கு பொருட்கள் விற்க முடியாது" : கடை உரிமையாளரின் செயலால் அதிர்ச்சியடைந்த பெண்!

அசாம் மாநிலம், சரியாளி என்ற பகுதியில் நூருல் ஆமின் என்பவர் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு ஜீன்ஸ் உடை அணிந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் வந்துள்ளார்.

இதைப் பார்த்த கடை உரிமையாளர் நூருல் ஆமின், "எனது கடையில் இருக்கும் பொருட்களை உனக்கு விற்க மாட்டேன்" எனக் கூறியுள்ளார். இதற்கு அந்தப் பெண் ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அவர், "ஜீன்ஸ் அணிந்திருக்கும் பெண்களுக்கு நான் பொருட்களை விற்பனை செய்வதில்லை" எனக் கூறி அந்த பெண்ணை அவமதித்துள்ளார். மேலும் உடனே கடையிலிருந்து வெளியேறும்படியும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைத் தனது தந்தையிடம் கூறியுள்ளார். உடனே அவர் கடைக்கு வந்து தட்டிக் கேட்டுள்ளார். அப்போது நூருல் ஆமின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்துகொண்டு அந்தப் பெண்ணின் தந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தந்தையும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து நூருல் ஆமினைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “மருத்துவமனைக்கு போகவேண்டாம்” : பெற்றோரின் மூடநம்பிக்கையால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - கேரளாவில் சோகம்!