India

முதல்வர் வேட்பாளராக லியாண்டர் பயஸ்?: “மே.வங்கம் தாய்நாடென்றால் கோவாவும் என் தாய்நாடுதான்” : மம்தா சூளுரை!

டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாலிவுட் நடிகைகள் நபிஷா அலி, மிர்னாலினி தேஷ்பிரபு ஆகியோர் மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முன்னிலையில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

கோவா மாநிலத்தில் 2022-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என ஏற்கெனவே மம்தா பானர்ஜி அறிவித்தார்.

இதையொட்டி கோவா மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணமாகச் சென்றுள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. இந்நிலையில்தான் மம்தா பானர்ஜி முன்னிலையில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் உள்ளிட்டோர் கட்சியில் இணைந்துள்ளனர்.

கோவாவில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடவுள்ள நிலையில் தனது கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் மம்தா. கோவாவில் லியாண்டர் பயஸை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்ள மம்தா பானர்ஜி தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

லியாண்டர் பயஸின் தந்தை வெஸ் பயஸ் தெற்கு கோவாவில் உள்ள வேலிம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பனாஜி நகரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவருக்கு சால்வை அணிவித்து மம்தா பானர்ஜி வரவேற்றார்.

பயஸை அறிமுகம் செய்யும்போது மம்தா பானர்ஜி, “லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் என் இளைய சகோதரர். நான் அமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே அவரை அறிவேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய மம்தா பானர்ஜி, “மம்தாஜி வங்காளத்தில் இருக்கிறாள், அவள் எப்படி கோவா செல்வாள் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஏன் கூடாது? நான் ஒரு இந்தியர். நான் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

நான் கோவாவின் முதலமைச்சராக வரவில்லை. நான் மதச்சார்பின்மையை நம்புகிறேன். ஒற்றுமையை நம்புகிறேன். இந்தியா எனது தாய்நாடு. வங்காளம் எனது தாய்நாடு என்றால், கோவாவும் எனது தாய்நாடுதான்” எனச் சூளுரைத்தார்.

இதன்மூலம், கோவாவில் தனது கட்சியை பலப்படுத்தும் திட்டம் இருந்தாலும் முதல்வராக வேறொருவரை முன்னிறுத்துவதை தெளிவுபடுத்தியுள்ளார் மம்தா. முதல்வர் வேட்பாளராக லியாண்டர் பயஸே முன்னிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

கோவா மொத்தம் 40 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. அதில் பா.ஜ.க தற்போது 17 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. காங்கிரஸிடம் 15 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மற்ற கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சியில் உள்ள நிலையில் மம்தாவின் தீவிர அரசியல் செயல்பாடு கோவாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிணாமுல் கட்சியில் சேர்ந்த லியாண்டர் பயஸ் நிருபர்களிடம் கூறுகையில், “நான் டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். இனிமேல் அரசியல் எனும் வாகனத்தில் ஏறி மக்களுக்கு சேவை செய்ய இருக்கிறேன். உண்மையில் தீதிதான் உண்மையான சாம்பியன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பவானிபூர் மக்கள் ஒவ்வொருவரின் சார்பாகவும்..” : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த மம்தா பானர்ஜி!