India
“பா.ஜ.க அமைச்சரை டிஸ்மிஸ் செய்துவிட்டு விசாரணை நடத்தவேண்டும்” : ஜனாதிபதியை சந்தித்த ராகுல், பிரியங்கா!
லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக, ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கோரிக்கை வைத்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த வாரம் நடந்த வன்முறையில் விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் மீது மோதிய காரில் ஒன்றிய பா.ஜ.க அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவரைக் கைது செய்ய வேண்டும் என்று விவசாயிகளும் எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தினர்.
ஆனால் லக்கிம்பூர் வன்முறைச் சம்பவம் நடந்தபோது காரில் தனது மகன் ஆஷிஷ் மிஸ்ரா இல்லை என்று ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறினார். இந்த வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை எடுத்துக்கொண்டது. இதனைத்தொடர்ந்து, ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஏழு பேர் குழு இன்று குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, காங். பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
குடியரசுத் தலைவரைச் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் தந்தை ஒன்றிய அமைச்சராக இருப்பதால் நியாயமான விசாரணை சாத்தியமில்லை என்பதால் அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என குடியரசுத் தலைவரிடம் கோரினோம். உச்சநீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தோம்” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், “நாங்கள் வைத்த கோரிக்கை தொடர்பாக இன்று ஒன்றிய அரசுடன் கலந்துரையாடுவதாக குடியரசுத் தலைவர் உறுதியளித்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!