India

தொழிலதிபரை அடித்துக் கொன்று காரில் வைத்து எரித்த மனைவி, மகன்கள் - விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி அருகே காட்டுப்பகுதியில் கடந்த 29ஆம் தேதி ஒரு கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் கிடந்தது. இதையடுத்து கிராம மக்கள், கார் அருகே சென்று பார்த்தனர். அப்போது காருக்குள் ஒரு நபர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் தீர்த்தஹள்ளி போலிஸாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அதன்படி போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

காருக்குள் உடல் கருகிய நிலையில் கிடந்த நபரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

காரின் பதிவு எண் தவறாக இருந்ததால் முதலில் உயிரிழந்தது யார் என்பதில் போலிஸாருக்கு குழப்பம் நிலவியது. காரின் சேஸ் நம்பரை கொண்டு அதன் உரிமையாளரை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர்.

போலிஸார் நடத்திய விசாரணையில் காரில் உடல் கருகி பிணமாக கிடந்தவர், சிவமொக்கா மாவட்டம் ஒசநகரை சேர்ந்த பாக்கு தோட்ட அதிபர் வினோத் (56) என்பது தெரியவந்தது. வினோத்தின் மனைவி, மகன்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் சந்தேகமடைந்த போலிஸார் தொடர்ந்து அவர்களிடம் கிடுக்கிப்படி விசாரனை நடத்தினர். கணவனை குடும்பத்தினருடன் சேர்ந்து கொலை செய்ததை அவரது மனைவி ஒப்புக்கொண்டுள்ளார்.

உயிரிழந்த வினோத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் தவறான பழக்கம் இருந்துள்ளது. இது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. அந்தப் பெண் சொத்தை அபகரிப்பார் என்ற அச்சத்தில் இருந்த அவரது மனைவி, மகன்கள், வினோத்தின் தம்பி மற்றும் உறவினர் ஒருவர் சேர்ந்து அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து செப்டம்பர் 26-ஆம் தேதி அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் வாங்கி வந்துள்ளனர். வீட்டில் வைத்து அவரை அடித்துக் கொலை செய்துள்ளனர். வீட்டில் படிந்த ரத்தக்கறையை கெமிக்கல் ஊற்றி அகற்றியுள்ளனர். ரத்தம் படிந்த ஆடைகள் மற்றும் செருப்புகளை எரித்துள்ளனர்.

இரண்டு நாள்கள் கழித்து வினோத்தின் உடலை காரில் கட்டிவைத்து இரவு 10.30 மணிக்கு எடுத்துச் சென்றுள்ளனர். உள்ளூர் கடைக்காரர் மூலம் காரின் நம்பர் பிளேட்டை மாற்றியுள்ளனர்.

காரில் வினோத்தின் சடலத்தை கொண்டு செல்லும்போது மொபைல் போனை அனைவரும் சுவிட்ச் ஆஃப் செய்துள்ளனர். மீண்டும் வீட்டிற்கு வந்ததும் போனை மீண்டும் ஆன் செய்துள்ளனர். வினோத்தின் மொபைல்போனை தண்ணீரில் தூக்கி வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து வினோத்தை அடித்துக் கொன்று காருடன் தீவைத்து எரித்த மனைவி, மகன்கள் உள்பட 5 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை; அடிவாங்கும்போது மனைவி வரவில்லை என கொலை செய்த கணவன்: மும்பையில் பயங்கரம்!