India

4 ஆண்டுகள் ஆச்சு; ஒரு முறையாவது சச்சரவில்லாமல் NEET நடைபெற்றுள்ளதா? - பாஜகவை வெளுத்து வாங்கிய கி.வீரமணி!

கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற நீட் தேர்வு ஒழுங்குமுறையுடன் ஓர் ஆண்டிலாவது நடைபெற்றுள்ளதா? இந்த சமூக அநீதியை தொடரவிடலாமா? என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பான அவரது அறிக்கையின் விவரம் வருமாறு:

‘நீட்’ தேர்வு என்ற ஆட்கொல்லி ஊழலின் ஊற்றுக்கு சில ‘அறிவு ஜீவிகளும்‘, கல்வியாளர்களாக அறிமுகமாகி, வாழ்நாள் முழுவதும் ஏதாவது பதவி லோக சாம்ராஜ்ஜியத்தின் பவிசை அனுபவிக்க இப்படி ஒரு ‘மரண மலிவு’ கல்வி ஏற்பாட்டிற்கு வக்காலத்துப் போட்டாலாவது தாங்கள் எதிர்பார்க்கும் பெரிய பதவிகள் கிடைத்து, ‘சாலோக, சாமிப, சாரூப, சர்வகிருத்தியமுஞ் ஆகிவிடலாம் என்று கருதுவோரும் ராஜாவை மிஞ்சும் ராஜவிசுவாசிகளாக உள்ளனர்!

இதுவரை ஒழுங்கு முறையுடன் ‘நீட்’ தேர்வு நடந்துள்ளதா?

அந்த மேதாவிலாசங்களுக்கு... கடந்த 4 ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வு வந்த பிறகு, நடந்த தேர்வுகளில் எந்த ஓர் ஆண்டிலாவது ஊழலற்ற, கேள்வித்தாள் குளறுபடிகள், ஆள்மாறாட்டங்கள், கொத்துக் கொத்தாக கொள்ளை லாப பேரங்கள் - என்று நடக்காமல் ஒழுங்கு முறையுடன் இந்த ‘நீட்’ தேர்வு நடந்துள்ளதா?

உயர்நீதிமன்றங்களிலும் இவற்றால் பாதிக்கப்பட்ட பலரால் வழக்குத் தொடரப்பட்டு, சுட்டிக்காட்டப்பட்டு, அலசப்பட்டும், ஏன் அப்படியே அமுக்கி வைக்கப்பட்டது?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவரான தோழர் டி.கே.ரெங்கராஜன் எம்.பி., அவர்கள் (அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது) மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்து பல்வகை ஊழல்கள் - புகார்கள்பற்றி அலசப்பட்டதை ‘நீட்’ ஆதரவாளர்கள் எவராவது மறுக்க முடியுமா?

தற்கொலை முடிவுவரை மாணவர்களைத் துரத்தும் நிலை ஏற்பட்டதை மறுக்க முடியுமா?

இந்த 4 ஆண்டுகளில் சில ஆண்டுகள் கேள்வித்தாள் வெறும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திலிருந்தே கேட்கப்பட்டதனால், மாநிலக் கல்வி போர்டில் தேர்வு எழுதிய பலரும் தோல்வி அடைந்து, தற்கொலை முடிவுவரை மாணவர்களைத் துரத்தும் நிலை ஏற்பட்டதை மறுக்க முடியுமா?

‘நீட்’ தேர்வுக்காக வாதாடுவோர் மறுக்க முடியுமா?

உயர்நீதிமன்ற நீதிபதிகளே கேட்டார்களே, ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் பலரும், எடுத்த எடுப்பிலேயே முதல் தடவையிலே ‘பாஸ்’ செய்து தகுதியாக்கிக் கொண்டவர்கள் எண்ணிக்கை வெகு சொற்பம்; ஆனால், மூன்று முறை, நான்கு முறை - பயிற்சி மய்யங்களில் பல லட்சம் ரூபாய் கொடுத்து செலவு செய்த பின்னர் வெற்றி பெற்றவர்களே - தேர்வானவர்களில் பெரும்பாலோர் என்பதை இந்த ‘நீட்’ தேர்வுக்காக வாதாடுவோர் மறுக்க முடியுமா?

தமிழ்நாட்டிலேயே ஒரு டாக்டர் தன் மகளுக்காக பொய் சான்றிதழ் (இராமநாதபுரம்) பெற்று, வழக்கில் சிக்கி, சிறையில் ‘கம்பி எண்ணிக் கொண்டிருப்பது’பற்றி இந்த ‘நீட்’ தேர்வின் தகுதி, திறமை, சீர்மைபற்றி சிலாக்கியப்படுத்திப் பேசும் மேதாவிகள் மறுக்க முடியுமா?

Also Read: நீட் பயிற்சி மையங்கள் கொழிப்பதற்கு பகடை காயாகும் மாணவர்களின் எதிர்காலம்: மறு தேர்வு கேட்டு NTAக்கு கடிதம்

அதுமட்டுமா?

சீர்மை - இந்தியா முழுவதிலும் உள்ள ஒரே அளவுகோலில் அளந்தால், மேலே படிக்க முடியும் என்று கேட்பவர்களைப் பார்த்து நாம் கேட்க விரும்புவதெல்லாம், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அரசமைப்புச் சட்ட கர்த்தாக்களால் (Founding Fathers) ஏன் கல்வி - மாநிலப் பட்டியலில் வைக்கப்பட்டது? பிறகு நெருக்கடி காலத்தில் எந்தவித விவாதமுமின்றி, எந்த மாநிலத்தின் ஒப்புதலுமின்றி திடீரென்று ஒத்திசைவுப் பட்டியலுக்கு (Concurrent List) ஏன் மாற்றப்பட்டது?

(இப்போது அதுபற்றிய விழிப்புணர்வு பெருகி, அது மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது - சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றும் தாக்கலாகி உள்ளது).

130 கோடி மக்களின் நியாயமான பண்பாட்டு உரிமைகளை மறுப்பதல்லவா?

பன் மதங்களைப் போல, பல மொழிகள், பல கலாச்சாரங்களைப் போலவே, பன்முகத்தன்மை கொண்ட இந்தியத் திருநாட்டில் ஒற்றை கலாச்சாரம் என ஏகபோகமாக்கிக் கொள்ள அனுமதிப்பது, இங்கு வாழும் 130 கோடி மக்களின் நியாயமான பண்பாட்டு உரிமைகளை மறுப்பதல்லவா?

இப்போதுகூட கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) தான் உள்ளது; Union List என்ற ஒன்றிய அரசு அதிகாரத்திற்கு மாற்றப்படவில்லை சட்டப்படி என்பதை அறவே மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, இப்படித் தானடித்த மூப்பாக, தேர்வு நடத்தி பட்டம் தரும் உரிமை பல்கலைக் கழகங்களுக்கு மட்டுமே உள்ள உரிமை என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு முரணாக இப்படி மாநில உரிமைப் பறிப்பு, சமூகநீதிக்குக் குழிபறிப்பு, ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவுக்குத் தடுப்பு - இவற்றை நிலை நிறுத்துவதுதானே இந்த நீட் தேர்வு!

இப்படி ஒரு சமூக அநீதியை நீடிக்கவிடலாமா?

எனவே, இது எந்த நோக்கத்திற்காகக் கொண்டு வரப்படுகிறது என்று சொல்லப்பட்டதோ - அந்த நோக்கமே முற்றிலும் தோற்றுப் போய்விட்ட நிலையில், இப்படி ஒரு சமூக அநீதியை மேலும் தொடர அனுமதிக்கலாமா?

இன்றைய பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள் ‘நீட்’ எழுதி பட்டம் பெற்றுதான் ‘பிரபல’ நிபுணர்களானார்களா?

மாணவர்களின், மக்களின், பெற்றோரின் ‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்’ பலனின்றிப் போய்விடாது!

‘‘நமது மக்களிடம்தான் இறையாண்மை உள்ளது; வேறு எவரிடமும் இல்லை’’ என்ற அரசமைப்புச் சட்ட பால பாடத்தைக்கூட ஏனோ ஒன்றிய ஆட்சியினர் வசதியாக மறந்துவிட்டு, மூர்க்கத்தனமாக இப்படி ‘நீட்’ என்ற முட்டுச் சந்தில் மாட்டிக்கொண்டு, வீம்பின்மீது வீற்றிருக்கவேண்டும்?

ஒன்றிய அரசு - மறுபரிசீலனை செய்யட்டும்!

மக்களின் எழுச்சிக் குரல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மகாராட்டிரத்தில், மேற்கு வங்கத்தில், கருநாடகத்தில் கேட்கத் தொடங்கிவிட்டன. இந்த சுவரெழுத்தைப் படிக்கத் தவறக்கூடாது ஒன்றிய அரசு - மறுபரிசீலனை செய்யட்டும்!

Also Read: நீட் மசோதாவால் எந்த பயனும் இல்லையா? பாரதியின் இந்த வரிகளை படிக்கலாமே! அதிமுக-பாஜகவை சாடிய முரசொலி நாளேடு!