India
“10 சரக்குகளை விட்டுவிட்டு, ஒன்றை மட்டும் பிடித்தா மோடி அரசு?” : போதைப்பொருள் கடத்தல் மையமாகிறதா குஜராத்?
குஜராத் மாநிலம் முந்த்ரா துறை முகத்தில் ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்பிலான சுமார் 2 ஆயிரத்து 988 கிலோ 21 கிராம் ஹெராயின் போதைப் பொருள் சிக்கியது நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் இருந்து ஈரான் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து, ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலுள்ள ஒரு முகவரியின் பெயரில் - இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஹெராயினை, முந்த்ரா துறைமுகத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் (The Directorate of Revenue Intelligence -DRI) கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், போதைப் பொருள் பார்சலில் குறிப்பிட்டிருந்த விஜயவாடா முகவரிக்குச் சென்று, அங்கு வசித்து வந்த வைஷாலி, சென்னையைச் சேர்ந்த அவரது கணவர் சுதாகர் ஆகியோரை கைது செய்த அதிகாரிகள், டெல்லியில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிலரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் வழியாக தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையிலும், ஒன்றிய பா.ஜ.க அரசானது, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு (Narcotics Control Bureau - NCP) தலைவரை நியமிக்காமல் கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக காலியாக வைத்திருப்பது ஏன்? என்று விவாதங்கள் கிளம்பியுள்ளன.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கெரா பல அடுக்கடுக்கான கேள்விகளை மோடி அரசுக்கு எழுப்பியுள்ளார். “2017-ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புடைய 1500 கிலோ ஹெராயின், 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் 175 கோடி மதிப்புடைய போதைப் பொருள் ஆகியவை குஜராத் வழியாக கொண்டுசெல்லும் போது பிடிபட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டிலும் ஏப்ரல் மாதம் 150 கோடி மதிப்புள்ள கஞ்சா பிடிபட்ட நிலையில், தற்போது இரண்டு கன்டெய்னர்களில் வந்த 3 டன் எடையுள்ள போதை மருந்து பிடிபட்டுள்ளது. இதன் மதிப்பு 9000 கோடி ரூபாய் என்றும், இப்பொழுது பிடிபட்ட போதைப் பொருள் மிகப்பெரிய அளவு என்றும் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு நாட்டில் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையிலும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைவர் பதவியை, மோடி அரசு கடந்த 18 மாதங்களாக நிரப்பாமல் உள்ளது ஏன்?
கடந்த சில ஆண்டுகளில், பாகிஸ்தான், ஈரான் அல்லது ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு போதை மருந்து கடத்தலுக்கு ‘விருப்பமான பாதையாக’ குஜராத் கடற்கரை மாறியது எப்படி?
அரசாங்கமும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவும் என்ன செய்து கொண்டிருக்கின்றன?
குஜராத்தைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரால் ஏன் இந்த போதை மருந்து சிண்டி கேட்டை உடைக்க முடியவில்லை?
இந்திய அரசு, குஜராத் அரசு மற்றும் என்.சி.பி-யின் மூக்கின் கீழ் இந்தியாவில் எப்படி ஒரு போதைப் பொருள் சிண்டிகேட் செயல்படுகிறது?”
தற்போது பிடிபட்டுள்ள ஹெராயின் போதைப் பொருள் அளவு, பனிப்பாறையின் முனைதானா?
என்.சி.பி போன்ற புலனாய்வு முகமைகள் வேலை செய்கின்றன என்பதைக் காட்டுவதற்காக, 10 சரக்குகளை விட்டுவிட்டு, ஒன்றை மட்டும் கையும் களவுமாக பிடித்தது போல காட்டுகிறார்களா?” என்று பவன் கெரா கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்.
மேலும், “இதனிடையே, ஹெராயின் பிடிபட்ட முந்த்ரா துறைமுகம் அதானியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதானி குழுமத்திற்கும் இதில் தொடர்பிருக்கலாம் என்று யூகங்கள் வெளியான நிலையில், இதனை அதானி குழுமம் வேகவேகமாக மறுத்துள்ளது.
“ஹெராயின் கடத்தலுடன் எங்கள் குழுமத்தை தொடர்புபடுத்தி பேசுவது உள்நோக்கம் கொண்டது. போதைப் பொருள்களுடன் வந்த கண்டெய்னர்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றைத் திறக்கும் அதிகாரம் அதிகாரிகளுக்குதான் உண்டு. எங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்புமே இல்லை” என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
Also Read
-
86,150 மாணவர்களுக்கும்,8615 ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் அன்பில் மகேஸ்
-
திருப்பெரும்புதூரில் ESI மருத்துவமனை அமைக்க அனுமதி - TR.பாலு MP-யின் தொடர் முயற்சிகளுக்கு வெற்றி !
-
"இரட்டை நாக்கு படைத்தவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை" - அமைச்சர் சேகர் பாபு விமர்சனம் !
-
“7 மலைக்குன்றுகள், 200 இயற்கை நீர்ச்சுனைகள் அழிந்து போகும்!” : ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்!
-
கூட்டாட்சி தத்துவத்தை உறுதிசெய்யும் இந்திய அரசியலமைப்பு : முரசொலி தலையங்கம்!