India

“தரமாட்டேன் போங்க... மோடி அனுப்புன பணம் அது” : வங்கி ஊழியர்களை அதிர்ச்சியடையச் செய்த கிராமவாசி!

பீகாரில் வங்கி தவறுதலாக டெபாசிட் செய்த ரூ.5 லட்சம் பணத்தை திருப்பி வழங்க கிராமவாசி மறுப்பு தெரிவித்து அந்தப் பணம் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்த 15 லட்சத்தின் முதல் தவணை என நினைத்து செலவழித்துவிட்டதாக கூறியதால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.

கறுப்புப் பணத்தை மீட்பதற்காக மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் தோல்வியடைந்தது. மக்களுக்குத் தருவதாகச் சொன்ன ரூ. 15 லட்சமும் வந்தபாடில்லை.

இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னா கிராம வங்கி ஒன்று, தங்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ரஞ்சித் தாஸ் என்பவரின் வங்கி கணக்குக்கு தவறுதலாக ரூ. 5.5 லட்சம் பணத்தை டெபாசிட் செய்துள்ளது.

நடந்த விவரத்தைக் கூறிம் அந்தப் பணத்தை திருப்பித்தர வேண்டும் என்று வங்கி நோட்டீஸ் அனுப்பியபோதுதான் அது தனக்குரிய பணம் இல்லை என்பது ரஞ்சித் தாஸுக்கு தெரியவந்துள்ளது.

பணம் தனது வங்கிக் கணக்குக்கு வந்தவுடன் பிரதமர் மோடி வாக்குறுதியளித்த 15 லட்ச ரூபாயில் முதல் தவணைதான் தனக்குக் கிடைத்துள்ளதாக நினைத்து அதனை முழுமையாக செலவழித்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

வங்கி கொடுத்த புகாரின் பேரில் அந்த நபரை போலிஸார் தற்போது கைது செய்துள்ளனர். பணத்தை திருப்பி வழங்க வங்கி கணக்கில் எதுவும் பாக்கி இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் வங்கி அதிகாரிகள் கையிலிருந்து பணத்தைச் செலுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Also Read: “மோடி அரசின் ‘வாய்ச்சேவை’ தொழில்களைக் காப்பாற்றுமா?”: பா.ஜ.க வகையறாக்களை சாடிய கனகராஜ் - சிறப்பு கட்டுரை!