India

”மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குங்கள்; அப்போதுதான் ஜனநாயகம் வலுப்பெறும்” - ரகுராம் ராஜன் கருத்து!

இந்தியாவை ஒன்றிய அரசால் மட்டுமே முழுமையாக நிர்வகிப்பது கடினம் என்பதால் மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

பொருளாதார கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று பேசிய ரகுராம் ராஜன், இந்தியா பெரிய நாடு என்பதால் ஒன்றிய அரசே அனைத்து மாநிலங்களையும் நிர்வகிப்பது கடினம் என்று கூறினார்.

ஒன்றிய அரசிடம் அதிகாரம் இருக்க வேண்டும் என்றாலும் மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கினால்தான், ஜனநாயகம் வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளார் ரகுராம் ராஜன். மேலும், பொது மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டால்தான் மக்களின் தேவைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசுக்கு தனியாருக்கு தாரைவார்க்க கூடாது. பொதுவான கட்டுப்பாடுகள் இல்லாமல் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் துறையிடம் ஒப்படைத்தால் அவை பொதுமக்களிடம் இருந்தே பணத்தை பிழிந்தெடுக்கும் என்று அவர் எச்சரித்தார்.

தனியார் மயமாக்கலுக்கு பதிலாக நிர்வாகத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ஒன்றிய அரசு மருத்துவம் மற்றும் கல்வி ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டியதோடு செலவுகளை குறைக்கவும் அரசு இயந்திரம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சாடினார்.

முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மாநில பொருளாதார ஆலோசனைக்குழுவில் உறுப்பினராகவும் ரகுராம் ராஜன் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “உணவுப் பொருளில் மாட்டுக்கறி கலப்படமா?” : மதவெறி கும்பலின் வாட்ஸ்அப் வதந்தியால் அதிர்ச்சி - உண்மை என்ன?