India

சாலையோரம் வசிக்கும் முன்னாள் முதலமைச்சரின் உறவினர்... “VIP அந்தஸ்து வேண்டாம்” என உருக்கம்!

மேற்குவங்க மாநிலத்தில் பத்து ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. இவரது மனைவியின் சகோதரி இரா பாசு. இவர் 34 வருடங்கள் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

சரளமாக ஆங்கிலம், பெங்காலி மொழி பேசக்கூடிய இவர் 1976ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை ஆசிரியர் பணியில் இருந்துள்ளார். பிறகு ஓய்வு பெற்ற இவர் பாரா நகரில் வசித்து வந்தார். பகன் என்ற இடத்தில் வசித்துவந்த இவர் திடீரென காணாமல் போய்விட்டார்.

இதையடுத்து இவர் கடந்த இரண்டு வருடங்களாக கொல்கத்தா டன்லப் பகுதியில் சாலைகளில் வசித்து வந்தது தெரியவந்தது. அங்கிருக்கும் வியாபாரிகள் கொடுக்கும் உணவைச் சாப்பிட்டு, சாலையோர கடைகளில் தூங்கி தன்னுடைய தினசரி வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

இவரை அடையாளம் கண்ட பலரும் இவரிடம் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படி இருப்பது குறித்து அவர்களிடம், நான் சொந்த முயற்சியில் ஆசிரியர் ஆனேன். வி.ஐ.பி அடையாளம் எனக்குத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆசிரியர் தினத்தன்று டன்லப் தொழிலாளர்கள் அவரை அழைத்து கவுரவித்துள்ளனர். இந்த விழாவில் பேசிய அவர், "பல மாணவர்கள் இந்த எளிய ஆசிரியரை அடையாளம் வைத்துள்ளனர். சிலர் என்னைக் கட்டி அணைக்கும்போது கண்ணீர் வடிக்கின்றனர். அனைத்து ஆசிரியர்களும் என் மீது அன்பு செலுத்துகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

"அவருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி கேட்டிருந்தோம். ஆனால் அவர் சமர்ப்பிக்கவில்லை. அதனால் அவருக்கு ஓய்வூதிய கிடைக்கவில்லை” என பிரியநாத் பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ண காளி சந்தா தெரிவித்துள்ளார்.

இவர் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இரா பாசுவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறது. முன்னாள் முதலமைச்சரின் உறவினர் கடந்த இரண்டு வருடங்களாக சாலையில் வசித்து வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மூடநம்பிக்கையின் உச்சம்.. ‘கல்வீச்சு’ திருவிழாவால் 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் - என்ன காரணம்?