India

நிஃபா பாதிப்பால் பலியான சிறுவனின் உறவினர்களுக்கு தொற்று அறிகுறி... தீவிர கண்காணிப்பில் வைத்த அதிகாரிகள்!

கேரளாவில் நிஃபா வைரஸ் பாதிப்பால் பலியான சிறுவனின் உறவினர்கள் 11 பேருக்கு நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இதில் 8 பேருக்கு பாதிப்பு இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் கடந்த 2018ஆம் ஆண்டு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிஃபா வைரஸ் மீண்டும் அச்சுறுத்தி வருகிறது.

நிஃபா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுவன் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு ஒரு சில மணி நேரங்களிலேயே அவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து சிறுவனுடன் தொடர்பில் இருந்த 251 பேரை சுகாதாரத்துறை அடையாளம் கண்டது. அவர்களுள் 38 பேர் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களில் 11 பேருக்கு அறிகுறிகள் தென்பட்டதால் 8 பேரின் மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. அவர்களுக்கு பாதிப்பு இல்லை என தெரிய வந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

அறிகுறிகள் இருக்கும் மற்ற சிலரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர்களது மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே பலியான சிறுவன் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் பக்கத்து வீட்டில் வளர்க்கப்படும் மரத்தில் இருந்து ரம்புட்டான் பழத்தை சாப்பிட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து ஒன்றிய சுகாதாரக்குழுவினர் நேற்று அந்த மரத்தில் இருந்து கீழே விழுந்து கிடந்த ரம்புட்டான் பழங்களை சேகரித்தனர். அதில் சில பழங்களை வவ்வால்கள் கடித்திருந்தது தெரியவந்துள்ளது.

அதைத் தொடர்ந்து அவற்றை பரிசோதனைக்காக போபால் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபோல் இறந்த சிறுவனின் வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளின் ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Also Read: “இந்த பிரச்சனை இருந்தா உடனே கொரோனா டெஸ்ட் எடுங்க” - புதிய அறிகுறிகள் பற்றி எச்சரிக்கும் மருத்துவர்கள்!