India

கொரோனா பாதித்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து சுவாசமளித்து காப்பாற்றிய செவிலியர் - ஒரு நெகிழ்ச்சிக் கதை!

கொரோனா பெருந்தொன்றின் நெருக்கடியான காலத்தில் தங்களின் உயிர்களைப் பொருட்படுத்தாமல் தன்னலமற்ற சேவையில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தையைச் செவிலியர் ஒருவர் காப்பாற்றிய நிகழ்வு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இப்படியான ஒரு உன்னத நிகழ்வு கேரள மாநிலத்தில்தான் நடந்துள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவர் நன்மணிக்கார பஞ்சாயத்திற்குட்பட்ட குடும்ப நல மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றுகிறார். சம்பவத்தன்று செவிலியர் ஸ்ரீஜா விடுமுறையால் வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது பெண் ஒருவர் மயங்கிய நிலையிலிருந்த இரண்டு வயதுக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குழந்தையைப் பார்த்தவுடன் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது என்பதை ஸ்ரீஜா தெரிந்து கொண்டார்.

இதையடுத்து குழந்தைக்கு உடனே செயற்கை சுவாசம் கொடுக்காவிட்டால், உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த செவிலியர் சற்றும் யோசிக்காமல் குழந்தையின் வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்து முதல் உதவி செய்தார்.

இப்படி அவர் தொடர்ச்சியாக குழந்தைக்குச் செய்ததை அடுத்து குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் குழந்தையை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கேரளாவில் கொரோனா தொற்று தீவிரமாக இருக்கும் நிலையில், தன் உயிரைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் உடனே குழந்தைக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய செவிலியர் ஸ்ரீஜாவை அமைச்சர் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

இது குறித்து ஸ்ரீஜா கூறுகையில், "எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பரவாயில்லை என கருதியே குழந்தைக்குச் செயற்கை சுவாசம் அளித்தேன். அது மிகவும் பயனளித்தது. குழந்தையின் உயிர்தான் முக்கியம் என எண்ணினேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: Scrub Typhus: கொரோனாவே இன்னும் ஓயல... அதற்குள் இந்தியாவை அதிரவைக்கும் புதிய வைரஸ் : அச்சத்தில் மக்கள்!