India

மேகதாது விவகாரம்: கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்த காவிரி ஆணையம் - கூட்டத்தில் நடந்தது என்ன?

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.கல்தார் தலைமையில் . டெல்லியில் நேரடியாக நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடக, கேரளா, புதுவை ஆகிய 4 மாநில அதிகாரிகள் கொண்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று நடைபெறுவது 13 ஆவது கூட்டம். இதற்கு முன் ஜுன் 25 ஆம் தேதி காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடக உறுப்பினர்கள் மட்டுமே நேரில் கலந்து கொண்டுள்ளனர். புதுவை, கேரளா மாநில உறுப்பினர்கள் காணொளிக்காட்சி மூலம் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் திறக்க வேண்டிய தண்ணீரின் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ஜூலை ஆகஸ்ட் மாதங்களுக்கு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரில் 30.6 டி.எம்.சி நீர் இன்னும் தர வேண்டிய பற்றக்குறை உள்ளது. தமிழகத்துக்கு ஆகஸ்ட் மாதம் 45.95 டி.எம்.சி, செப்டம்பர் மாதம் 36.76 டி.எம்.சி தண்ணீரை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும்.

அதன் படி திறக்கப்பட வேண்டிய 30.6 டி.எம்.சி பற்றாக்குறை நீரையும், செப்டம்பர் மாதத்துக்கு உரிய 36.76 டி.எம்.சி நீரையும் திறப்பதற்கான உத்தரவை கூட்டத்தில் காவிரி ஆணையம் பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 29ஆம் தேதி நிலவரப்படி 86.38 டி.எம்.சி கர்நாடகா வழங்க வேண்டும். ஆனால் 55.75 டி.எம்.சி. மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 30.6 டி.எம்.சி நீரை உடனே திறக்க வேண்டும் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதனையடுத்து, மேகதாது அணை கட்ட அனுமதி வழங்குவது குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று கர்நாடக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அது குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்தது. ஆக நான்கு மாநிலங்களும் ஒத்துக்கொள்ளாத நிலையில் மேகதாது அணை குறித்து விவாதிக்க இயலாது எனக் கூறி கர்நாடக அரசின் கோரிக்கை நிராகரித்து காவிரி மேலாண்மை ஆணையம் திட்டவட்டமாக கூறியுள்ளது.