India

'கொரோனாவைப் போன்று டெங்குவிலும் கோட்டைவிடும் உ.பி.அரசு': யோகியை போட்டு தாக்கும் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ!

உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்திலிருந்தபோது சுகாதார கட்டமைப்புகளை யோகி ஆதித்யநாத் அரசு மேம்படுத்தாததால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் யோகி அரசு தோற்றுவிட்டதாக பா.ஜ.க எம்.எல்.ஏக்களே குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அலட்சியமாக இருந்ததைப்போல் மாநிலத்தில் பரவிவரும் டெங்கு பரவலிலும் மாநில அரசு கவனக்குறைவாகச் செயல்பட்டு வருவதாக பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் அடுக்கடுக்காக புகார் செய்துள்ளார்.

பெரோஸாபாத் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ மணிஷ் அசிஜா என்பவர்தான் யோகி அரசு மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பெரோஸாபாத் மாவட்டத்தில் மட்டும் கடந்த 22ஆம் தேதி முதல் இதுவரை 46 குழந்தைகள் டெங்குகாய்ச்சலில் இறந்துள்ளனர்.

இன்று மட்டும் ஆறு குழந்தைகள் டெங்குவுக்கு பலியாகியுள்ளன. மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் குப்பைகளுடன் கலந்த மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகியுள்ளது. இதுகுறித்து நகராட்சிக்குப் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் கடந்த ஏப்ரலில் மாநில அரசு சார்பில் கொசுக்களை ஒழிப்பதற்காக 50 வாகனங்கள் அனுப்பப்பட்டன. ஆனால் ஐந்து மாதங்களாக அந்த வாகனங்கள் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

இப்படி அலட்சியமான நடவடிக்கைக்கு மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையே காரணம். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க எம்.எல்.ஏவின் குற்றச்சாட்டுக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் “இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்த செய்தி தவறானது. இதுதொடர்பாக அறிக்கை எதுவும் அரசுக்கு வரவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: அரசியல் சாசனத்தையும் விற்றுவிட்டீர்களா? : மோடி அரசை துளைத்தெடுத்த ராகுல் காந்தி!