India

"RSS அஜெண்டாவை ஏற்காதவர் உயர் பதவிகளுக்குச் செல்லவே முடியாதா?" : UPSC தேர்வுத்தாள் கேள்விகளால் சர்ச்சை!

யு.பி.எஸ்.சி நடத்திய சி.ஏ.பி.எஃப் தேர்வில் பா.ஜ.கவுக்கு ஆதரவானவர்களை பணிக்குத் தேர்வு செய்யும் நோக்கில் கேள்விகள் கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

யு.பி.எஸ்.சி தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி மத்திய ஆயுதப்படை துணை ராணுவப் படை (CAPF) பணிகளுக்கான தேர்வை நடத்தியது. இந்த தேர்வுக்கான கேள்வித்தாள் இப்போது அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சி.ஏ.பி.எஃப் கேள்வித்தாளில் ‘விவசாயிகள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது’ ‘மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதும் கேள்விகள் தலா 20 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டுள்ளன.

மேலும், 'மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்தும், டெல்லியில் ஏற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர் நெருக்கடி குறித்தும் 10 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.

பா.ஜ.கவின் குரலை எதிரொலிக்கும் வகையிலான கேள்விகள் அதிக மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யு.பி.எஸ்.சி பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னணி அமைப்பாக மாறியுள்ளது. பா.ஜ.க அஜெண்டாவை ஏற்காத ஒருவர் காவல்துறை அதிகாரியாகவோ அல்லது ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ் போன்ற நிர்வாக அதிகாரிகளாகவோ ஆக முடியாது எனும் நிலையை ஏற்படுத்த மோடி அரசு எண்ணுவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியுள்ளார்.

ஒன்றிய பா.ஜ.க அரசு ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தம் கொண்டவர்களை உயர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய பார்க்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இந்தத் தேர்வை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Also Read: “பெகாசஸ்: வாய் திறக்க மறுக்கும் பா.ஜ.க அரசு... காப்பாற்றப்படுமா மக்களாட்சி?” : பேரா. ராஜன் குறை கட்டுரை!