India

“எனக்கு ஏதாவது வேலை கொடுங்க பிரதமரே...” : உலகக் கோப்பை சாம்பியனை கூலி வேலைக்குத் தள்ளிய பா.ஜ.க அரசு!

இந்திய வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நிலையில், அவர்களால் தேசத்துக்குப் பெருமை என உணர்ச்சி பொங்கப் பேசும் பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்களை தொடர்ச்சியாக வஞ்சித்து வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2018ல் நடைபெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வென்று உலகக் கோப்பையைக் கைப்பற்றியது அஜய் குமார் ரெட்டி தலைமையிலான இந்திய அணி.

உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வீரரான நரேஷ் தும்டா, வறுமை காரணமாக குஜராத்தில் காய்கறி விற்பனை செய்தும், கூலி வேலை செய்தும் வருகிறார்.

பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் வீழ்த்திய இந்திய அணியில் இடம் பெற்றவர் நரேஷ் தும்டா. இவர் குஜராத் மாநிலம், நவ்சாரியைச் சேர்ந்தவர். இந்திய அணிக்காக பலமுறை உலகக் கோப்பையில் விளையாடியுள்ளார்.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, நவ்சாரி பகுதியில் காய்கறி விற்பனை செய்தும், சில நேரங்களில் கட்டிட வேலைக்குச் சென்றும் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசின் சார்பிலும், பிசிசிஐ சார்பிலும் உதவித்தொகை வழங்கப்படாததால் உலகக்கோப்பை சாம்பியனான இவர் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து நரேஷ் தும்டா அளித்துள்ள பேட்டியில், "நான் 2018-ம் ஆண்டு நடந்த பார்வை மாற்றுத்திறனாளி உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தேன்.

உலகக் கோப்பை வென்ற பின் எப்படியும் எனக்கு ஏதாவது அரசு வேலை கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், இதுவரை வேலை கிடைக்கவில்லை. தற்போது கொரோனா வைரஸால் வறுமைக்குத் தள்ளப்பட்டு, ரூ.250 தினசரி கூலிக்கு வேலைக்குச் செல்கிறேன். சில நேரங்களில் காய்கறி விற்பனை செய்கிறேன்.

குஜராத் முதல்வரிடம் 3 முறை அரசு வேலை தரக்கோரி வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், எந்தவிதமான பதிலும் இல்லை. பயனும் இல்லை. என் குடும்பத்தின் நிலை கருதி பிரதமர் மோடி எனக்கு ஏதாவது ஒரு அரசு வேலை தர வேண்டும்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Also Read: சிக்கும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி... 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!