India
“கல்வியில் மாநில அரசுகளின் உரிமைகளைத் தொடர்ந்து பறிப்பதை அனுமதிக்க முடியாது”: மோடி அரசுக்கு வைகோ கண்டனம்!
மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் ஒன்றிய அரசுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- “நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 20 ஆயிரம் இடங்களில், 50 விழுக்காடு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்களால் அளிக்கப்படுகின்றன.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 50 விழுக்காடு இடங்களும் அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் அந்த இடங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒரு இடம் கூட வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்தது.
இதனை எதிர்த்துத் தி.மு.க, ம.தி.மு.க, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி ராமமூர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வு, மத்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களில், இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும். அதில் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இதற்காக ஒரு குழு அமைத்து, மூன்று மாதங்களில் செயல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டியது. ஆனால்,ஒன்றியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இல்லாமலே நீட் தேர்வு நடைபெறும் என்று கடந்த ஜூலை 12ஆம் தேதி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் காரணமாக தற்போது மத்திய அரசு, அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் முதுநிலை, இளநிலை மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) 27 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
பா.ஜ.க அரசால் திணிக்கப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு நடப்புக் கல்வி ஆண்டிலேயே வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம், மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் அனைத்து முதுநிலை பட்டப் படிப்பு, சிறப்புப் படிப்புகளுக்கும் ஒன்றிய அரசே பொதுக் கலந்தாய்வு நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமிருந்து பறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ மேற்படிப்புக்கான 100 விழுக்காடு இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வைத் தமிழக அரசே நடத்த வேண்டும். இதில் மத்திய சுகாதாரத் துறையே கலந்தாய்வு நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பா.ஜ.க அரசு, கல்வியில் மாநில அரசுகளின் உரிமைகளைத் தொடர்ந்து பறிப்பதை அனுமதிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்