India
“மோடி ஆட்சியில் தேசிய எல்லை மட்டுமல்ல; மாநில எல்லைகளும் பாதுகாப்பாக இல்லை” : ராகுல் காந்தி சாடல்!
வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இதில் அசாம் மாநிலத்தில் பாரக் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள கச்சார், கரிம்கஞ்ச், ஹாய்லாகன்டி ஆகிய மாவட்டங்களும், மிசோரம் மாநிலத்தின் அய்சவால், கொலாசிப், மமித் ஆகியவை எல்லைப் பகுதிகளைப் பிரிக்கின்றன.
எல்லை தொடர்பான சர்ச்சை நீடிப்பதால் கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை மோதல் தீவிரமானது. இந்நிலையில், இரு மாநில எல்லையில் மீண்டும் கடந்த 26-ம் தேதி வன்முறை வெடித்தது.
இரு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும், போலிஸாரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி மோதிக்கொண்டனர். இந்த வன்முறைச் சம்பவத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 போலிஸார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.
அசாம் முதல்வரும், மிசோரம் முதல்வரும் வெளிப்படையாக வாக்குவாதம் செய்து, ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர். இந்த மோதல் போக்கைத் தொடர்ந்து, உள்துறை அமித்ஷா தொலைபேசியில் இருமாநில முதல்வர்களையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பா.ஜ.க ஆட்சி செய்யும் அசாம் மாநிலத்தில் அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தல் இல்லாமல் அம்மாநில முதல்வர் தனிச்சையாக எப்படி பேசியிருப்பார் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
அதுமட்டுமல்லாது அசாமில் ஆட்சிக்கு வந்தால் எல்லை பிரச்சனையை தீர்த்து வைப்பதாக பா.ஜ.க வாக்குறுதி அளித்தது. ஆனால், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இருமாநில போலிஸார் எல்லை பிரச்சனையில் மோதியதில் உயிரிழப்பு நிகழந்துள்ளது. பா.ஜ.கவால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை.
மேலும் இருமாநில அரசுகளும் பிரச்சனையை வளர்த்துக்கொள்ளும் போக்கையும் விடுவதாக இல்லை. அதேபோல், திரிபுரா மற்றும் மணிப்பூரை தவிர பிற வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் அசாமுடன் நீண்ட காலமாக எல்லை பிரச்சினையில் நீடிக்கின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசின் ஆட்சியில், தேசிய எல்லை மட்டுமல்ல மாநில எல்லைகளும் பாதுகாப்பாக இல்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தேசிய எல்லையும் பாதுகாப்பாக இல்லை, மாநில எல்லையும் பாதுகாப்பாக இல்லை. சர்ச்சைகள் மற்றும் கலவரங்கள் நம் நாட்டின் புனித பூமியில் விதைகள் போல விதைக்கப்படுகின்றன - விளைவுகள் மோசமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !