India

"கொரோனா காலத்தில் கிராமப்புற சுகாதாரம் மேம்படுத்தப்பட்டதா?" : ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் MP கேள்வி!

கொரோனா காலத்தில் கிராப்புற சுகாதார உட்கட்டமைப்பை மேம்படுத்த ஒன்றிய அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என தி.மு.க மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் மத்திய சென்னை தொகுதி தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விகள் வருமாறு:-

கிராமப்புறங்களில் கொரோனா நோய் தொற்று அதிக அளவில் பரவுவதை கட்டுப்படுத்தவும், கிராமப்பற சுகாதார நிலையங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவர்களுக்கு சரியான மருத்துவம் வழங்கவும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஒன்றிய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்ற துறைகளின் அமைச்சகத்துடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டனவா? எனில், அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.

மார்ச் 2020 முதல் ஜூலை 2021 வரையிலான கொரோனா நோய்த்தொற்று காலத்தில், நாடு முழுவதும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் ஏதேனும் ஒன்றிய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டதா? அப்படி என்றால், அதன் விவரங்கள் குறித்து மாவட்ட வாரியாக பட்டியலிட்டு தெரியப்படுத்தவும். இவ்வாறு அவர் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பவார், ‘‘தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் புதிய சுகாதார மையங்கள் அமைத்திடவும், செயல்பாட்டில் உள்ள மையங்களின் தரம் உயர்த்தவும் உதவிகள் வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் கொரோனா பரவுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்துகிறது.

கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் படுக்கைகளை அதிகரிப்பதற்கும், கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கப்படுகிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பா.ஜ.க அரசால் ஜனநாயகத்திற்கு ஆபத்து; இனி அடிக்கடி டெல்லி வருவேன்” : மோடிக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை!