India

“தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்தாவிட்டால் பொருளாதாரம் இன்னும் அடிவாங்கும்” - இந்தியாவை எச்சரிக்கும் IMF

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் தொழில்கள் வழக்கம்போல இயங்கத் தொடங்கிவிட்டன.

சரிந்துள்ள நாட்டின் பொருளாதாரம் மற்றும் மொத்த கொள்முதல் உற்பத்தியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவின் வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 9.5% மட்டுமே இருக்கும் எனக் கணித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரையிலான காலாண்டில் இந்திய பொருளாதாரம் சரிவைச் சந்தித்துள்ளதாக IMF அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 12.5% மொத்த கொள்முதல் உற்பத்தி வளர்ச்சியை இந்தியா இந்த ஆண்டு எட்டும் என IMF கணித்திருந்தது. ஆனால் ஜூலை மாதத்தின் இறுதியில் 9.5 சதவீத வளர்ச்சியை மட்டுமே இந்தியா அடையும் எனக் கூறி தங்கள் கணிப்பை மாற்றி அறிக்கை வெளியுட்டுள்ளது.

அதேசமயம், அடுத்த ஆண்டு வளர்ச்சி 1.6 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் துரிதப்படுத்தப்படுவதைப் பொறுத்தே பொருளாதாரம் எவ்வாறு இருக்கும் என்று கூறமுடியும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தடுப்பூசி போடும் வேகம் குறைவாக இருப்பதால் ஜி-20 நாடுகளில் அதிகம் பாதிப்படையும் நாடுகளாக இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இருக்கும் என IMF தெரிவித்துள்ளது.

Also Read: “மாநில உரிமைகளைப் பறித்து மக்களுக்கு ஊறு விளைவிப்பதா?” - ஒன்றிய மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனம்!