India

கர்நாடகாவில் தீவிரமடையும் பருவமழை.. 283 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம் - அலட்சியமாக செயல்படும் பா.ஜ.க அரசு!

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக இந்த மழை வடகர்நாடக மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களை புரட்டி போட்டு உள்ளது. யாதகிரி, பெலகாவி, பாகல்கோட்டை, ஹாவேரி, ராய்ச்சூர், தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, சிக்கமகளூரு, சிவமொக்கா, குடகு ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

யாதகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன்காரணமாக கிருஷ்ணா ஆற்றுப்படுகையில் உள்ள ஹாவேரி, பாகல்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மேலும் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள தரைமட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் யாதகிரி-தேவதுர்கா இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

வடகர்நாடகத்தில் உள்ள தூத்கங்கா, வேதகங்கா, சிரண்யகேசி நதிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில் கனமழைக்கு ஆயிரம் ஹெக்டேர் கரும்பு பயிர்கள் நாசமாகி உள்ளது. உக்கேரி தாலுகா கோட்டபாகி கிராமத்தில் உள்ள துர்காதேவி கோவிலை வெள்ளநீர் சூழ்ந்து உள்ளது.

பெலகாவி மாவட்டம் நிப்பானி தாலுகா நிலவதி மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக பெங்களூரு-மும்பை சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. சங்கேஸ்வரா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட 20 குடும்பத்தினரை பேரிடர் மீட்பு குழுவினர் படகுகள் மூலம் சென்று மீட்டனர். தொடர் கனமழை காரணமாக தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, சிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், பெலகாவி, தார்வார் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணா, காவிரி, துங்கபத்ரா, பீமா, கபிலா உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 45 தாலுகாக்களில் 283 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த கிராமங்கள் உள்பட மாநிலம் முழுவதும் மொத்தம் 36,498 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 31,360 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 22,417 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 237 நிவாரண முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உத்தரகன்னடாவில் 7 இடங்களிலும், சிக்கமகளூருவில் 4 இடங்களிலும், குடகில் 3 இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதுவரை கனமழைக்கு 2,600 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 78 கால்நடைகள் செத்துள்ளன. மேலும் 58 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமாகி உள்ளன.

கனமழைக்கு பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா ராமபுரா கிராமத்தை ஹிரா விபூதி என்ற 12 வயது சிறுமி உள்பட 5 பேர் நேற்று இறந்தனர். நேற்று முன்தினம் கர்நாடகத்தில் மழைக்காக 4 பேர் உயிரிழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

3 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. முன்னச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாததே இத்தகைய பாதிப்புக்கு காரணம் என மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

Also Read: “திருச்சியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்” : அமைச்சர் கே.என்.நேரு உறுதி!