India

செல்ஃபியால் நேர்ந்த கொடுமை... துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இளம் பெண் பலி: உத்திர பிரதேசத்தில் சோகம்!

இளைஞர்களின் செல்ஃபி மோகத்தால் அவ்வப்போது உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் செல்ஃபி எடுக்கும் போது குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவரது மகன் ஆகாஷ் குப்தா. இவருக்கும் ராதிக என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றைக் குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார்.

இந்நிலையில், செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் கொண்ட ராதிகா வீட்டிலிருந்த துப்பாக்கியைவைத்து செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, குண்டு நிரப்பப்பட்ட ஒற்றைக்குழல் துப்பாக்கியைத் தனது முன் நிறுத்தியபடி, ட்ரிக்கரில் கையை வைத்துக்கொண்டு செல்ஃபி எடுத்துள்ளார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக டிரிக்கரில் கை அழுத்தியதால் குண்டு வெடித்துள்ளது. பின்னர் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் அவரின் அறைக்கு வந்து பார்த்தபோது அவர் ராதிகா ரத்த வெள்ளத்திலிருந்துள்ளார்.

பிறகு அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ராஜேஷ் குப்தா போலிஸாரிடம், "பஞ்சாயத்து தேர்தல் காரணமாக காவல்நிலையத்தில் துப்பாக்கி ஒப்படைக்கப்பட்டது. பிறகு தேர்தல் முடிந்து என் மகன் காவல்நிலையத்தில் இருந்து வீட்டிற்கு எடுத்துவந்துள்ளார். அப்போதுதான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும் ராதிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். திருமணமான சில மாதத்திலேயே புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தேர்வு அறையிலிருந்து வெளியேற்றம்... மருத்துவ மாணவி எடுத்த விபரீத முடிவு: காஞ்சிபுரம் அருகே சோகம்!