India

“மோடி அரசு செய்தது தேசதுரோகம்” - பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் ராகுல் காந்தி விளாசல்!

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம், இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரின் மொபைல் போன்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட பலரின் மொபைல் போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாக ஆதாரப்பூர்வமான தகவல்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்த விவகாரம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. கனக்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “பெகாசஸ் மூலம் அனைத்து தரப்பினரும் உளவு பார்க்கப்பட்டுள்ளனர். எனது மொபைல் போன்களும் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமித் ஷா விலக வேண்டும்.

பெகாசஸ் மென்பொருளை ஆயுதமாக இஸ்ரேல் வகைப்படுத்தி உள்ளது. அதனை பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும். ஆனால், பிரதமரும், உள்துறை அமைச்சரும், இந்திய மாநிலங்கள் மற்றும் அரசியலமைப்புக்கு எதிராகப் பயன்படுத்தி உள்ளனர்.

ரஃபேல் தொடர்பான விசாரணையை தடுக்க பெகாசஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஊழலுக்கு பிரதமரே நேரடியாக பொறுப்பேற்க வேண்டும். பெகாசஸ் ஸ்பைவேர் அரசியல் ரீதியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பிரச்னையை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்திற்கு எதிராகவும், நாட்டின் அனைத்து அரசியல் அமைப்பிற்கு எதிராகவும் பயன்படுத்தி உள்ளனர். இதற்கு சரியான ஒரே வார்த்தை தேசதுரோகம். வேறு வார்த்தை இல்லை.” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

Also Read: இஸ்ரேலுக்கு பயணித்த ஒரே இந்திய பிரதமர் மோடிதான்... Pegasus ஸ்பைவேர் விவகாரத்தில் பா.ஜ.க உண்மை பேசுமா?