India

மகனுக்கு முக்கிய பதவி... வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் பதவி விலகல் உறுதி? - எடியூரப்பா சூசகம்!

தான் ராஜினாமா செய்யமாட்டேன் என மறுத்துவந்த எடியூரப்பாவின் ட்விட்டர் பதிவு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெறவில்லை. இதனால் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது.

காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி ஆட்சியை பா.ஜ.க பல்வேறு திரைமறைவு பேரங்கள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தி கலைத்தது. பின்னர் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க அரசு அமைந்தது. இந்த ஆட்சி இன்னும் 2 ஆண்டுகளை நிறைவு செய்யாத நிலையில், அம்மாநில பா.ஜ.கவிற்குள் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது.

முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு எதிராக பா.ஜ.க தலைவர்களே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதுபற்றி கட்சி மேலிடத்திற்கும் புகார்கள் சென்றன. இதனால், எடியூரப்பா பதவி விலக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே திடீரென டெல்லி சென்ற எடியூரப்பா பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடியூரப்பா, “முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவில்லை.” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், தனது ஆட்சியின் 2 ஆண்டு நிறைவையொட்டி, வரும் 25ஆம் தேதி பா.ஜ.க எம்.எல்.ஏக்களுக்கு விருந்து நிகழ்ச்சி நடத்த எடியூரப்பா திட்டமிட்டிருந்தார். அவர் பதவி விலக இருப்பதால் அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் எடியூரப்பா தனது ட்விட்டர் பக்கத்தில், “பா.ஜ.கவின் உண்மையான தொண்டனாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நான் சார்ந்த கட்சிக்கு சேவை செய்வது எனது கடமை. கட்சிக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் நடந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன். யாரும் எவ்விதமான போராட்டத்திலோ இல்லை மரியாதைக் குறைவான செயல்களிலோ ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தனது மகன் விஜயேந்திராவுக்கு முக்கிய பதவி அளிக்கவேண்டும் என பா.ஜ.க தலைமையிடம் எடியூரப்பா விடுத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக அவர் தயாராகியிருப்பதாகத் தெரிகிறது.

Also Read: “ஆபரேஷன் தியேட்டர்களில் பீர் பாட்டில்கள்” : பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் அவலம்!