India

கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா எடியூரப்பா? - டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு!

கர்நாடகாவில் கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெறவில்லை. இதனால் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்து.

இந்த அரசை பா.ஜ.க பல்வேறு திரைமறைவு பேரங்கள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தி கலைத்தது. பின்னர் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க அரசு அமைந்தது. இந்த ஆட்சி நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், அம்மாநில பா.ஜ.கவிற்குள் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.

முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு எதிராக பா.ஜ.க தலைவர்களே குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதுபற்றி கட்சி மேலிடத்திற்கும் புகார்கள் சென்றுள்ளன. இதனால், எடியூரப்பா பதவி விலக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

எடியூரப்பாவுக்கு வயதாகி விட்டதாலும், நிர்வாகத்தில் குடும்பத்தினர் தலையிடுவதாலும், அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என கட்சியினரே மேலிடத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், திடீரென டெல்லி சென்ற எடியூரப்பா நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார். இதையடுத்து பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த எடியூரப்பாவிடம், முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எடியூரப்பா, “முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவில்லை. அதுகுறித்து வரும் தகவல்கள் வதந்தி” எனக் கூறியுள்ளார்.

எனினும், எடியூரப்பா முதலமைச்சர் பதவிலியிருந்து விலகுவது உறுதி என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. விரைவில் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்வார் எனக் கூறப்படுகிறது.

Also Read: “இந்தியாவுக்கு தேசிய மொழியே கிடையாது” - ஒப்புக்கொண்ட ஒன்றிய அரசு!