India
“இந்துக்கள் வசிக்கும் இடங்களில் மாட்டிறைச்சி விற்க தடை” : பா.ஜ.க ஆளும் அசாமில் புதிய மசோதா தாக்கல்!
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் பொருளாதார பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரமுடியாமல் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்தால், குடும்பத்தை நடத்த முடியாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியை அன்றாடம் சந்திக்கின்றனர்.
இந்த சூழலில், பா.ஜ.க அரசு பசுக்களை பாதுகாக்க ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் பல இந்துத்வா வன்முறைக் குழுக்களும் நாடுமுழுவதும் உருவாகியுள்ளன. அந்தக் குழுக்களின் கொலைவெறியால் பலர் தங்களின் உயிரை இழந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது தனது அரசியல் ஆதாயத்திற்காக இந்து மக்களிடம் ஆதரவை பெறுவதற்காக பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் ஆளும் மத்திய பிரதேச பா.ஜ.க அரசு ஒரு அமைச்சரவையே உருவாக்கியிருப்பது சமீபத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து தற்போது, இந்துக்கள் வசிக்கும் இடங்களில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மாட்டிறைச்சி விற்க தடைவிதித்தும், மீறினால் 8 ஆண்டு சிறை என பா.ஜ.க ஆளும் அசாம் மாநிலத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா போன்று வடகிழக்கு மாநில மக்கள் மாட்டிறைச்சியை அன்றாட உணவில் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். மக்களின் இந்த உணவுப் பழக்கத்தை சிதைக்கும் வகையில் பா.ஜ.க ஆளும் அசாம் மாநிலத்தில் புதிய மசோதா நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இந்து, சீக்கிய, ஜைனர்கள் வசிக்கும் ஊர்களில் 5 கிலோமிட்டர் சுற்றளவுக்கு மாட்டிறைச்சி விற்க, கொண்டு செல்ல தடைவிதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சட்டத்தை மீறினால், மூன்று முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறை ஐந்து லட்சம் ரூ வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மற்ற பா.ஜ.க மாநிலங்களில் மாட்டிறைச்சி விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதித்து சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் இந்த அளவுக்கு கடுமையான விதிமுறைகள் இல்லை. எருமை மாடு இறைச்சி விற்பனைக்கு அந்த மாநிலங்கள் விலக்கு அளித்துள்ளன. சமூக ஒற்றுமையை குலைக்கும் வகையில் இந்த கொடூரமான மசோதாவை பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ளதாகக் கூறி எதிர்கட்சிகள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!