India
“கொரோனாவே இன்னும் ஓயவில்லை.. அதற்குள் அச்சுறுத்தும் ‘ஜிகா’ வைரஸ்” : கேரளாவில் 14 பேர் பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பல மாநிலங்களில் குறைந்து வரும் நிலையில், கேரளாவில் மட்டும் தொற்று எண்ணிக்கை குறையாமல் இருக்கிறது. மேலும் கடந்த 25 நாட்களாக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இந்நிலையில் நேற்று புதிதாக 13,772 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவே கட்டுக்குள் வராத நிலையில், கேரளாவில் புதிதாக ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்குக் காய்ச்சல் மற்றும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
பின்னர் அவரிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய நுண்ணுயிரியியல் ஆய்வகத்திற்கு கேரள சுகாதாரத்துறை அனுப்பி வைத்துள்ளது. ஆய்வு முடிவில் அந்த பெண்ணுக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கேரள சுகாதாரத்துறை உடனே அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரின் மாதிரிகளைச் சேகரித்து, புனே ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்துள்ளது. மேலும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 14 பேருக்குப் புதிதாக ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜிகா வைரஸ் என்பது கொசுக்கள் மூலம் பரவக்கூடிய தொற்றாகும். மேலும், ஜிகா 3 முதல் 14 நாட்கள் வரை உடலில் இருக்கும். பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7வது நாளில் அறிகுறிகள் காணப்படும். கொசுக்கடிகளைத் தவிர்ப்பதன் மூலமே ஜிகா வைரஸ் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள முடியும் என்று உலக சுகாதார அமைப்பும், மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.
14 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அம்மாநில சுகாதாரத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!