India
“மக்களோடு மக்களாக”: எளிமையான பொருளாதார மேதை ஜீன் ட்ரெஸ்.. சரியாக அடையாளம் கண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் அடங்கிய “முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு”வில் இடம்பெற்று இருப்பவர் பொருளாதார மேதை ஜீன் ட்ரெஸ். இவரின் பின்புலமும் வாழ்க்கையும் சற்று வித்தியாசமானது. தற்போது இவர் சாலையில் ஏழைகளுடன் அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மிகவும் எளிமையான இவர் இந்தியாவிற்காக பல்வேறு சேவைகள் செய்துள்ளார்.
பெல்ஜியம் நாட்டில் 1959-ஆம்ஆண்டு பிறந்தார். இவரது தந்தை ஜாக்குவஸ் டிரைஸும் பொருளாதார மேதைதான். ஜீன் ட்ரெஸ் 20 -ஆவது வயதில் இந்தியாவுக்கு வந்தார். 1979 -ஆம் ஆண்டு முதல் இவர் இந்தியாவில் வசித்து வருகிறார். டெல்லி பொருளியல் பள்ளியிலும் பேராசிரியராகப் பணி செய்தார். பின்னர் ஜி.பி.பந்த் அறிவியல் பள்ளியில் வருகை தரும் பேராசிரியராகப் பணி செய்தார். இந்திய அரசின் திட்டக் குழுவில் திட்டம் மற்றும் வளர்ச்சிப் பிரிவில் மதிப்புறு பேராசிரியராகவும் இருந்தார்.
பொருளாதாரத்தில் ஆர்வம்!
பொருளியல் வளர்ச்சிக்கும், பொதுமக்கள் பொருளியல் வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார். பசி, பிணி, பஞ்சம், கல்வி, பாலின வேறுபாடுகள், குழந்தைகள் நலம், வேலைவாய்ப்புகள், பள்ளி குழந்தைகளுக்கான உணவுத்திட்டம் போன்ற பல சிக்கல்களை ஆராய்ந்துதம் நூல்களிலும் கட்டுரைகளிலும்வெளிப்படுத்தினார். இவரது புத்தகங்களை படித்தால் பொருளாதாரத்தில் ஆர்வம் உள்ளவர்களும் புரிந்துகொள்வர்.
குறிப்பாக சம உரிமை, கல்வி, இந்தியாவில் ஆண்கள், பெண்களுக்கான உரிமை, வறுமை, பெண்களின் பிரச்சினைகள், குழந்தைகளின் ஆரோக்கியம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் இறங்கி உள்ளார்.
பொருளாதார மேதை நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னுடன் இணைந்து பொருளாதாரம் குறித்து 12 புத்தகங்களை எழுதியுள்ளார். 150 -க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் 2002-ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை பெற்றார். இவர் டெல்லியில் பி.ஹெச்.டி. படித்தார். கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் கௌரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெல்லா பாட்டியாவும் சமூக செயற்பாட்டாளர்.
பல்கலைக்கழகங்களுக்கு சைக்கிளில் சென்றுதான் பாடம் நடத்தும் எளிமையாளர் ஜீன் ட்ரெஸ். டெல்லியில் இவர் சைக்கிளில் வலம்வருவதை அதிகம் பார்க்க முடிகிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான வரைவு அறிக்கையை தயார் செய்தவர். இவர் ஏழைகளுடன் ஏழையாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கத்தை கொண்டவர்.
மக்களுடன் மக்களாக!
டெல்லி ஜந்தர் மந்தரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுடனான போராட்டத்தில் மக்களுடன் மக்களாக ஜீன் ட்ரெஸ் கலந்துகொண்டார். அப்போது குருத்வாராவில் இருந்து காரில் இருந்து போராட்டக்காரர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வந்தன. ஒவ்வொருவருக்காக உணவு வழங்கி கொண்டிருந்த தன்னார்வலர்கள் அடையாளம் கண்டுகொண்டனர்.
அவருக்கு கூடுதலாக சப்பாத்தியை வைக்க முயன்றனர். அதற்கு ஜீன் ட்ரெஸ், ‘இங்கு போராட்டம் நடத்தும் மக்கள் அனைவரும் இரு சாப்பாத்திகளை மட்டுமே சாப்பிடுகின்றனர். எனக்கும் அதுவே போதும்' என்று கூறி தன்னார்வலர்களை வியக்கவைத்தார்.
ஜீன் ட்ரெஸ் மற்றும் அவருடைய மனைவி இருவருமே சமூகநீதி கொள்கையில் உறுதியாய் இருப்பவர்கள். ஆய்வுப்பட்டக் கல்வி பயிலும்போதும் அதன்பின்னரும் எளிய வாழ்க்கையை தம்விருப்பத்தின் அடிப்படையில் மேற்கொண்டார். வீடுகளற்ற ஏழை மக்களுடன் வாழ்ந்தார். அவர்களுக்கு வீடுகள் கிடைக்கச்செய்த பெருமைக்குரியவர்.
- ப்ரியா (நன்றி: தினமணி)
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !